Last Updated : 30 Apr, 2021 03:12 AM

 

Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய கிரிக்கெட்டின் தளபதி

இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி ராஜா என்றால், அதன் தளபதியாக இருந்து வழிநடத்தி வருபவர் ரோஹித் சர்மா. இன்று (ஏப்ரல் 30) அவரது பிறந்த நாள்.

ரோஹித் சர்மாவின் சொந்த ஊர் ஆந்திராவின் விசாகப்பட்டினம். அவருக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகள் பேசத் தெரியும். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கை தனது ரோல் மாடலாகக் கொண்டு கிரிக்கெட்டில் தடம்பதித்த ரோஹித் சர்மா, ஆரம்ப கட்டத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னராக இருந்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 2007-ம் ஆண்டில் இடம்பிடித்தாலும், நடுவரிசை வீரராக இருந்ததால், அணியில் தனது இடத்தை தக்கவைக்க கடுமையாக போராடியுள்ளார் ரோஹித் சர்மா. இந்த நிலையில் 2013-ம் ஆண்டில் ரோஹித்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வைத்தார் தோனி. அன்றுமுதல் கிரிக்கெட் உலகில் ரோஹித் சர்மாவின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா 3 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார். இதில் 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 264 ரன்கள்தான் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ரன்களாக உள்ளது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை ரோஹித் சர்மா வசம் உள்ளது.

சைவ உணவை சாப்பிடுபவராக இருந்தாலும், அசைவத்தில் முட்டையை மட்டும் ரோஹித் சர்மா சேர்த்துக்கொள்வார். ஒருமுறை நண்பர் ஒருவரின் சவாலை ஏற்றுக்கொள்ளும் விதமாக 45 முட்டைகளை ரோஹித் சர்மா சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மாவுக்கு அதிகம் பிடித்த விஷயம் தூக்கம். இந்திய வீரர்களில் அதிக நேரம் தூங்குபவர் ரோஹித் சர்மாதான் என்று கேப்டன் விராட் கோலி, ஒருமுறை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x