

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத் தில் நேற்று சென்னை - கோவா அணிகள் மோதின. இப்போட்டியின் முதலாவது பாதி ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுப்பாட்டிலேயே பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. சென்னை அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை கோவா வீரர்கள் முறியடித்தனர்.
ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் கிடைத்த பெனாலிடி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்த பெலிசாரி சென்னை அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் அது நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் கோவா வீரர் ஹகிப் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து 61-வது நிமிடத்தில் தங்களுக்கு கிடைத்த மற்றொரு பெனாலிடி கிக் வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டது.
இந்நிலையில் ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் கோவாவின் ஜோஃப்ரே ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் விறுவிறுப்பாக ஆடிய சென்னை வீரர்களுக்கு அடுத்தடுத்து 2 கோல்கள் கணக்கில் சேர, சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.