பீல்டிங்கில் தவறு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து

பீல்டிங்கில் தவறு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து
Updated on
1 min read

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 172 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மொகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ரிஷப்பந்த் இரு பவுண்டரிகளை விரட்டினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய சிம்ரன் ஹெட்மையர் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். ஹெட்மையர், ஜேமிசன் வீசிய 18-வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்தஓவரில் 21 ரன்கள் சேர்க்கப்பட்டதால் டெல்லி அணியால் ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு செல்ல முடிந்தது. முன்னதாக ஹெட்மையர் 15 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை தேவ்தத் படிக்கல் தவறவிட்டிருந்தார். இதனால் ஆட்டம் பெங்களூரு அணியின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியது.

ஆனால் சிராஜ் கடைசி ஓவரை சிறப்பாக வீசியதால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. போட்டி முடிவடைந்ததும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறும்போது, “ஒரு கட்டத்தில் ஆட்டம் விலகிச் செல்வதாக நினைத்தேன். ஆனால் சிராஜின் இறுதி ஓவர் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. அவர் தொழில்முறை ரீதியாக முழுதிறனை கையாள்வார் என நாங்கள் நினைத்தோம். பீல்டிங்கில் தவறு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டம் இவ்வளவு தூரம் சென்றிருக்கப்போவது இல்லை. பந்து வீச்சில்கடைசி சில ஓவர்களில் ஹெட்மையர் குறிவைத்து செயல்பட்டார். மற்றபடி நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தோம்" என்றார்.

இன்றைய ஆட்டம்

மும்பை - ராஜஸ்தான்

இடம்: டெல்லி

நேரம்: பிற்பகல் 3.30

டெல்லி - கொல்கத்தா

இடம்: அகமதாபாத்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in