

கம்மின்ஸை தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான பிரெட் லீ இந்தியாவுக்கு நிதியுதவி வழங்கி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்காக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ.29.12லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் பிற வீரர்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்ணாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் வர்ணனையாளருமான பிரெட் லீ கரோனாவை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீ வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா எப்போதும் எனது இரண்டாவது நாடு. இங்கு கிரிக்கெட் விளையாடியபோது மக்கள் என் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள். நான் ஒய்வு பெற்ற பிறகும் அது தொடர்கிறது. இங்குள்ள மக்கள் தற்போது கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
இந்த இக்கட்டான நிலையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதன்படி, எனது ஒரு பிட் காய்னை இந்தியாவுக்கு நிதியுதவியாக அளித்திருக்கிறேன். இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்க சற்று உதவ முடியும். முன்கள பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.
இதனை முன்னெடுத்த கம்மின்ஸுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.