Last Updated : 26 Apr, 2021 05:09 PM

 

Published : 26 Apr 2021 05:09 PM
Last Updated : 26 Apr 2021 05:09 PM

பாட் கம்மின்ஸின் மனிதநேயம்: கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க பி.எம். கேர்ஸ் நிதிக்கு ரூ.29லட்சம் நன்கொடை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் பாட் கம்மின்ஸ்: படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்காக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ.29.12லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தான் செய்த இந்தச் சிறிய பங்களிப்பு மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்த முடியும் என்று கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் தொற்றுக்கு ஆளானவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் கிடைக்காமல் அல்லல்பட்டதை நாடே கண்டது. டெல்லியில் மட்டும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கோர தாண்டவமாடுவதைப் பார்த்த உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாடுகள் மருந்துகள், மருத்துவக் கருவிகள், பிபிடி ஆடைகள் எனப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், இந்திய மக்களுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கும், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கும் 50 ஆயிரம் டாலர்களை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''இந்தியா நான் பல ஆண்டுகளாக மிகவும் நேசித்த நாடு. இதுநாள் வரை நான் சந்தித்ததிலேயே இங்குள்ள மக்கள் மிக அன்பானவர்கள், கனிவானவர்கள். கரோனா வைரஸ் பரவல் தீவிரமாகிவரும் இந்த நேரத்தில் மக்கள் பலரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக இருக்கும்போது, ஐபிஎல் டி20 போட்டிகள் நடத்துவது சரியானதுதானா என்றெல்லாம் சில ஆலோசனைகள், விவாதங்கள் ஓடின. என்னுடைய ஆலோசனை என்னவென்றால், இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாளும் லாக்டவுனில் இருக்கும் மக்கள் சில மணி நேரம் மகிழ்ச்சியாகவும், தங்களை மகிழ்ச்சிப்படுத்தவும் இந்த ஐபிஎல் டி20 தொடர் உதவுகிறது.

லட்சக்கணக்கான மக்களுக்கு நல்லவிதமாகப் பயன்பட வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களாகிய எங்களுக்குச் சிறப்பு உரிமை வழங்கப்பட்டு, அதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வைத்து நான் பி.எம். கேர்ஸ் நிதிக்கு நான் பங்களிப்பு செய்திருக்கிறேன். குறிப்பாக, நோயுற்ற மக்களுக்கு ஆக்சிஜன் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்க இந்த நிதி உதவட்டும். மற்ற வீரர்களும் இதேபோன்று தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க இது ஊக்கமாக அமையும்.

என்னுடன் விளையாடும் சக வீரர்களும், உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் இருந்து, இந்தியா மீது அன்பும், இரக்கமும் கொண்டிருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யுங்கள். நான் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை அளித்து பங்களிப்பைத் தொடங்குகிறேன்''.

இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x