Last Updated : 26 Apr, 2021 06:45 AM

 

Published : 26 Apr 2021 06:45 AM
Last Updated : 26 Apr 2021 06:45 AM

சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி: சன் ரைசர்ஸுக்காக தனிஒருவனான போராடிய வில்லியம்ஸன் : பேர்ஸ்டோவை பயன்படுத்தாமல் தவறு செய்த வார்னர்

சூப்பர் ஓவரில் களமிறங்கி பவுண்டரி அடித்து வெற்றிக்கு வித்திட்ட டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் | படம் உதவி ட்விட்டர்

சென்னை


சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்ததையடுத்து ஆட்டம் டையில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி சூப்பர் ஓவரில் 7 ரன்கள் சேர்த்தது. 8 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசிப் பந்தில் ஒரு ரன் ஓடி 8 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றனர். டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் 39 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. 5 போட்டிகளில் 4 வெற்றி,ஒருதோல்வி என 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்வி என 2 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

சூப்பர் ஓவர்

இந்த ஐபிஎல் சீசனில் முதல் சூப்பர் ஓவர் இதுதான். சூப்பர் ஓவரில் அணியில் வார்னர், வில்லியம்ஸன் களமிறங்கினர். டெல்லி கேபிட்லஸ் தரப்பில் அக்ஸர் படேல் பந்துவீசினார். முதல் பந்தைச் சந்தித்த வார்னர் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஓரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் வில்லிய்ஸன் ஒரு பவுண்டரி விளாசினார். 4-வது பந்தில் வில்லியம்ஸன் ரன் எடுக்கவில்லை. அடுத்த இரு பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. ஒருபவுண்டரி உள்ளிட்ட 7 ரன்கள் சேர்த்தது. 8 ரன்கள் சேர்க்கப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டாலும், வார்னர் சரியாக க்ரீஸைத் தொடாமல் ஓடியதால், 7 ரன்களாகக் குறைக்கப்பட்டது.

தவண், பந்த்

சன்ரைசர்ஸ் தரப்பில் சூப்பர் ஓவரை ரஷித் கான் வீசினார். 8 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் ரிஷப் பந்த், ஷிகர் தவண் களமிறங்கினர். ரஷித் கான் வீசிய முதல் பந்தில் ரிஷப் பந்த் ஒரு ரன் எடுத்தார், 2-வது பந்தில் வார்னர் லெக்பை மூலம் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் ரிஷப்பந்த் ரிவர்ஷ் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடித்தார்.

4-வது பந்தில் பந்த் ரன் ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தில் ரிஷப் பந்த் கால்காப்பில் வாங்கி லெக் பையில் ஓடினார். மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்யப்பட்டு தோல்வி அடைந்தது. கடைசிப்பந்தில் ஒரு ரன் தேவை தவணுக்கு பேட்டில் பந்து மீட் ஆகாததால் லெக் பையில் ஓடியதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.

ஏன் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுப்பு

இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 முறை சூப்பர் ஓவரைச் சந்தித்துள்ளதால் அந்த அனுபவம் இந்த முறை கை கொடுத்தது. சூப்பர் ஓவரில் வழக்கமாக ரபாடா பந்துவீசுவார். ஆனால், இந்த முறை ரபாடா நல்ல ஃபார்மில் இல்லாததாலும், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகஇருப்பதாலும், அக்ஸர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.


அஸ்வின் இருக்கும்போது அக்ஸர் படேலைத் தேர்வு செய்தது வியப்பாக இருந்தது. இருப்பினும் இந்தத் தொடர் முழுவதும் அஸ்வினால் முத்திரை பதிக்கும் வகையில் பந்துவீசமுடியவில்லை என்பதால் தேர்வை மாற்றியிருக்கலாம்.

தவறு செய்த வார்னர்

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை அந்த அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்த பேர்ஸ்டோவை சூப்பர் ஓவரில் ஆடவைக்காமல் வார்னர் தவறு செய்துவிட்டார் அதற்கான விலையையும் சன்ரைசர்ஸ் அணி கொடுத்துவிட்டது. பேர்ஸ்டோவின் பேட்டிங்ஆய்வுகளின்படி, களத்தில் நிற்கும்போது ஒவ்வொரு 2.5 பந்துகளுக்கும் பவுண்டரி அடிக்கும் திறமை பெற்றவர்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகள் சார்பில் அடிக்கப்பட்ட 8 சிக்ஸரில் பேர்ஸ்டோ மட்டுமே 4 சிக்ஸர் அடித்தார், 3 பவுண்டரிகள் அடித்துள்ளார். அவரை சூப்பர் ஓவரில் களமிறக்காமல் வார்னர் களமிறங்கியது தவறு. வில்லியம்ஸன் ஏற்கெனவே களத்தில் நின்று ஃபார்மில் இருந்ததால், அவர் வந்தது சரியான முடிவு.

வார்னர் திறமையான பேட்ஸ்மேன்தான், ஆனால், நேற்றைய ஆட்டத்தில் சரியாக ஆடாமல் ரன் அவுட் ஆகிவிட்டார், அணிசரியாக விளையாடாததால், கேப்டன் என்றஅடிப்படையில் மனஅழுதத்தில் இருக்கும்போது ஃபார்மில் இருக்கும் பேர்ஸ்டோவை களமிறக்குவதுதான் சிறந்ததாக இருந்திருக்கும்.

சுசித் அதிரடி ஆறுதல்

சன்ரைசர்ஸ அணிக்கு நேற்றையஆட்டத்தில் ஆறுதலாக இருந்தவர் 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெகதீசா சுசித். சுசி்த் 19-வது ஓவரில் களமிறங்கியபோது, 9 பந்துகளுக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி்க்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் ஓவரில் அதிரடியாக 2 பவுண்டரிகள் அடித்து பதற்றத்தைக் குறைத்தார்.

ரபாடா வீசிய கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா ஓவரில் வில்லியம்ஸன் ஒருபவுண்டரியும், மிட்விக்கெட்டில் சுசித் ஒருசிக்ஸரும் விளாசி வியக்கவைத்தார். சுசித்தின் கடைசிநேர அதிரடி ஆட்டம்தான் சூப்பர்ஓவர்வரை சன்ரைசர்ஸ் அணி நகர்வதற்கு முக்கியக் காரணம். வேறு யாராவது களமிறங்கியிருந்தால், நிச்சயம் சூப்பர் ஓவர் வராமல் சன்ரைசர்ஸ் கதை முடிந்திருக்கும்.

தனிஒருவன் வில்லியம்ஸன்

சன்ரைசர்ஸ் அணியில் வெற்றிக்காக கடைசிவரை போராடியவர் வில்லியம்ஸன் மட்டும்தான் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க ஒரு பேட்ஸ்மேன் நிலைத்திருந்தாலே ஆட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்திருக்கும்.
பேர்ஸ்டோ(38), வில்லியம்ஸன்(66நாட்அவுட்) தவிர மற்ற வீரர்களான விராட்சிங்(4), கேதார் ஜாதவ்(9), அபிஷேக் சர்மா(5) ரஷித் கான்(0), விஜய் சங்கர்(8) என ஒற்றைபடை ரன்னில் வெளிேயறி கேப்டன் வார்னருக்கு பெரும் அழுதத்தைக் கொடுத்தனர்.

பாதி பிட்ச்சுக்கு வந்த கேதார் ஜாதவ்

சிஎஸ்கே அணியிலிருந்து சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்ட கேதார் ஜாதவ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது(என்ன செய்யப்போறாரோ…எனும் வேறுவிதமான எதிர்பார்ப்பு).
ஆனால், மிஸ்ரா பந்துவீச்சில் இறங்கிவந்து ஷாட் அடிக்கிறேன் என்று பாதிபிட்சுக்கு கேதார் ஜாதவ் வந்துவிட்டார், பந்து ரிஷப்பந்த் கைக்குச் சென்றுவிட்டது. நடுவர் அவுட் வழங்குவதற்கு டீசன்ட்டாக கேதார் ஜாதவ்(9) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

மிகப்பெரிய பிரச்சினை

சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக இருப்பது நடுவரிசை வீரர்கள்தான். சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் பேர்ஸ்டோ, வில்லியம்ஸன், வார்னர், ரஷித்கான்(அல்லது வேறுயாரோ) விளையாடினால் மட்டும்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை வந்துள்ளது. நடுவரிசையில் அனுபவம் மிக்க எந்த உள்நாட்டு பேட்ஸ்மேன்களும் இல்லை. மணிஷ் பாண்டேவை இந்த ஆட்டத்தில் அமரவைத்ததும் மிகப்பெரிய தவறு.

சிறந்த பேட்ஸ்மேனான மணிஷ் பாண்டே மேட்ச் ஃபினிஷர் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், களத்தில் நிலைத்து ஆடக்கூடியவர், நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் செய்யக்கூடியவர். இந்த ஆட்டத்தில் வில்லியம்ஸனுடன் பாண்டே இருந்திருந்தால், ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும்.
சன்ரைசர்ஸ் அணியில் கடந்த 5 போட்டிகளில் இதுவரை எந்த உள்நாட்டு வீரர்களும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை, நிலைத்து ஆடவும் இல்லை. இந்த கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சினை கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து தொடர்கிறது.

இந்த சீசனில் இந்த குறைபாடு சென்னை ஆடுகளத்தோடு முடியப்போவதில்லை, அடுத்த சுற்றிலும் இது சன்ரைசர்ஸ் அணிக்கு தொடரப்போகிறது. வலுவான நடுவரிசையை அமைக்காதவரை சன்ரைசர்ஸ் அணி வெற்றியைக் கோட்டைவிட்டுக் கொண்டே இருக்கும்.

நல்ல தொடக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா, தவண் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்தது. தவண் 28 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் வெளியேறினார், முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

நல்ல ஃபார்மில் இருந்த பிரித்வி ஷா 53 ரன்னில் ரன்அவுட் ஆகினார். ரிஷப் பந்த், ஸ்டீவ் ஸ்மித் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர்.

ரிஷப்பந்த் 37ரன்கள் சேர்த்தபோது, கவுல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 56 ரன்கள் சேர்த்தனர். ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது டெல்லி கேபிடல்ஸ் . சன்ரைசர்ஸ் தர்ப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x