ஹாமில்டன் டெஸ்ட் தொடக்கம்: முதல் நாளில் இலங்கை 264/7- மேத்யூஸ், ஸ்ரீவர்தனா அரை சதம்

ஹாமில்டன் டெஸ்ட் தொடக்கம்: முதல் நாளில் இலங்கை 264/7- மேத்யூஸ், ஸ்ரீவர்தனா அரை சதம்
Updated on
2 min read

நியூஸிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் 67 ஓவரில் முடித்துக்கொள்ளப்பட்டது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் மெக்கலம் பீல்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணி யில் கருணாரத்தேன, குஸால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்தது. கருணாரத்னே 12 ரன்னில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மெண்டிசையும், சவுதி வெளியேற்றினார். அவர் 31 ரன் எடுத்தார்.

ஜெயசுந்தரா-சண்டிமால் ஜோடி நிதானமாக ஆடியதால் 26வது ஓவரில் இலங்கை 100 ரன்களை கடந்தது. ஜெயசுந்தரா 26, சண்டிமால் 47 ரன்களில் வெளியேற இலங்கை அணி 34.2 ஓவரில் 121 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 5வது விக்கெட்டுக்கு கேப்டன் மேத்யூஸ் உடன் இணைந்த ஸ்ரீவர்தனா பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.

64.2 ஓவரில் இலங்கை அணி 259 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்ரீவர்தனா ஆட்டமிழந்தார். அவர் 81 பந்தில், 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ரன் எடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது. இதற்கு முன்பு 2003ல் ஜெயவர்த்தனே-தில்ஷான் ஜோடி 133 ரன்கள் எடுத்ததே நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. இதனை மேத்யூஸ்-ஸ்ரீவர்தனா ஜோடி முறியடித்தது.

அதே ஓவரில் விதாங்கே ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்த ஓவரில் ரங்கனா ஹெராத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளைக்கு முன்பாக 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இலங்கை அதன் பின்னர் 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. 67 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. மேத்யூஸ் 63, ஷமீரா ரன் எதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். நியூஸி. தரப்பில் பவுல்ட், டிம் சவுதி தலா 2, பிரேஸ்வெல் 1 விக்கெட் கைப்பற்றினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மெக்கலம் சாதனை

நியூசிலாந்தின் மெக்கல்லம் நேற்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம் தொடர்ச்சியாக 99 டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 2004 மார்ச் 10ல் டெஸ்டில் அறிமுகமானார். அன்று முதல் இதுவரை ஒரு போட்டியை கூட தவறவிடவில்லை. இவருக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் உள்ளார். அவர் 98 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கில்கிறிஸ்ட் 96 போட்டியிலும், டிராவிட் 93 போட்டியிலும், சச்சின் டெண்டுல்கர் 84 போட்டியிலும் தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளனர். இந்த சாதனைப்பட்டியலில் 153 ஆட்டங்களில் பங்கேற்று ஆலன் பார்டர் முதலிடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in