Published : 24 Apr 2021 04:28 PM
Last Updated : 24 Apr 2021 04:28 PM

ராஜஸ்தான் அணிக்குக் கடும் பின்னடைவு: ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்

ஜோஃப்ரா ஆர்ச்சர் | கோப்புப் படம்.

லண்டன் 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், இங்கிலாந்து வீரருமான ஜோப்ரா ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. முழங்கையில் அறுவை சிகிச்சை செய்ய இங்கிலாந்து சென்றார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு ஆர்ச்சரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் எடுத்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட ரூ.7.2 கோடி தகுதியானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் ஆர்ச்சரின் பந்துவீச்சு அமைந்திருந்தது.

கடந்த 3 தொடர்களிலும் ஆர்ச்சர் தனது பந்துவீச்சால் எதிரணியை மிரளவைத்தார். அதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களைத் தெறிக்கவிட்டார். முழங்கை அறுவை சிகிச்சைக்குப் பின், ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியில் விளையாடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்தியில் ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், பந்துவீச்சுப் பயிற்சியாளர் லூயிஸ் ஆகியோருடன் சேர்ந்து ஆர்ச்சர் தொடர்ந்து பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், தற்போது ஆர்ச்சர் பங்கேற்காதது ராஜஸ்தான் அணிக்குப் பெரும் பின்னடைவாகும்.

ஆர்ச்சருக்கு இரு வாரங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டபின், வலியில்லாமல் ஆர்ச்சர் உணர்ந்த பின்புதான் வழக்கமான போட்டிக்குத் திரும்புவார். மே மாதம் பிற்பகுதியில்தான் சசெக்ஸ் அணிக்காக ஆர்ச்சர் பங்கேற்பார் என்று இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x