

உலககோப்பை போட்டியில் இந்திய அணியில் 16வது வீரராக சேர்க்கப்பட்டிருந்த தவால் குல்கர்னிக்காக ஐசிசிக்கு கூடுதலாக ரூ.2.4 கோடியை செலுத்தியதாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை 50 ஓவர் உலககோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் ஐசிசி விதிகளின்படி ஒரு அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். இவர்களுக்கு மட்டுமே தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஐசிசி செய்து கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்திய அணியில் 16வது வீரராக மிதவேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி இடம் பெற்றிருந்தார். உலககோப்பைக்கு முன்பாக இந்திய அணி 3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் இடம்பெற்றிருந்த குல்கர்னி, உலககோப்பைக்கான அணியினருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் குல்கர்னி தங்குவதற்கான இடம், உணவு, விமான டிக்கெட் உள்ளிட்ட விஷயங்களுக்காக ஐசிசிக்கு ரூ.2.4 கோடியை கூடுதலாக வழங்கியதாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரில் சூதாட்டம் எதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்த ஐசிசியின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குழுவுக்காக ரூ.2.49 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்கட்டமைப்புகளுக்காக செலவிட்ட தொகையையும் பிசிசிஐ-யிடம் இருந்து பெற்றுள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ரூ.11.20 கோடி, கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.67 லட்சம், ஒரிஸா மற்றும் இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்கம் தலா ரூ.8.43 கோடி வாங்கியுள்ளன. இவை தவிர 2014 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போன ஜாகீர்கானுக்கு ரூ.81.12 லட்சம் மற்றும், இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கான சம்பளம், வர்ணணையாளராக செயல்பட்ட கவாஸ்கருக்கான ஊதியம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.