Last Updated : 24 Apr, 2021 03:14 AM

 

Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் கடவுளின் பிறந்தநாள்

இன்றைய தினம் (ஏப்ரல் 24) ‘இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாக’ கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள். இந்த நாளில் சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:

சச்சின் டெண்டுல்கரை ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனாகத்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னதாக மைதானத்தின் எல்லைக்கோடு அருகே நின்றுகொண்டு, பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்தை மைதானத்துக்குள் தூக்கிப் போடும் ‘பால் பாயாக’ சச்சின் டெண்டுல்கர் இருந்துள்ளார். 1987-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடந்த இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் ‘பால் பாயாக’ இருந்துள்ளார்.

பின்னாளில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள சச்சின், “நான் எத்தனையோ மைதானங்களில் சதம் அடித்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காத சந்தோஷம், நான் ‘பால் பாயாக’ இருந்தபோது எனக்கு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு, நான் மைதானத்தில் நின்ற முதல் தருணம் அது. அந்த தருணத்தை மறக்க முடியாது” என்று கூறியுள்ளார். பின்னாளில் 1988-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு ஆடவந்தபோது, பயிற்சி ஆட்டம் ஒன்றில் அந்த அணியில் பீல்டிங் செய்ய ஒரு வீரர் குறைவாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு பயிற்சிக்காக சென்றிருந்த சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தானுக்காக பீல்டிங் செய்ய வைத்துள்ளனர். அந்த வகையில் சச்சின் முதலாவதாக பாகிஸ்தான் அணிக்காகவே ஆடியுள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகவே சச்சின் டெண்டுல்கர் விரும்பியுள்ளார். இதற்காக அவர் சென்னையில் உள்ள எம்.ஆர். எஃப் பேஸ் அகாடமியில் பயிற்சிபெற வந்தார். ஆனால் அப்போது அந்த அகாடமியின் பயிற்சியாளராக இருந்த டென்னிஸ் லில்லி, அவரை நிராகரித்தார். பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவரால் சிறந்த வீரராக வரமுடியும் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x