Last Updated : 20 Dec, 2015 05:58 PM

 

Published : 20 Dec 2015 05:58 PM
Last Updated : 20 Dec 2015 05:58 PM

டெல்லி கிரிக்கெட் சங்க புகார்: ஜேட்லிக்கு சேவாக், காம்பீர் ஆதரவு

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) ஊழல் நடைபெற்றதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீது ஆம் ஆத்மி அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், ஜேட்லிக்கு கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2013-ம் ஆண்டு வரை பதவி வகித்த அருண் ஜேட்லி அவரது பதவி காலத்தில் ஊழல் செய்துள்ளார் என டெல்லி அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான தனிப்பட்ட விசாரணைக்காக ஜேட்லி பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக்கும், கவுதம் காம்பீரும் ட்விட்டரில் ஜேட்லிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பு ஊழலில் அருண் ஜேட்லியை குற்றஞ்சாட்டுவது முறையற்றது.

மக்கள் வரி பணம் இன்றி டெல்லியில் முறையான கிரிக்கெட் மைதானம் ஒன்றை கொண்டு வந்தவர் அவரே.

டெல்லி டி.டி.சி.ஏ.வில் நடந்த தவறுக்கு சில முன்னாள் வீரர்கள் ஜேட்லியை குற்றஞ்சாட்டுவது வருத்தமளிக்கிறது. இப்போது குற்றஞ்சாட்டுபவர்கள் பலரும் ஜேட்லி உதவியுடனேயே உயர் பதவியை அடைந்தார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், " டி.டி.சி.ஏ.வுடன் நான் இருந்த காலகட்டத்தில், ஏதாவது ஒரு வீரர் ஒருவர் திடீரென தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தால் உடனடியாக அதுபற்றி அருண் ஜேட்லியிடம் தெரிவிப்பேன்.

டி.டி.சி.ஏ.வில் தகுதியான வீரர்களுக்கு இடம் கிடைக்க மற்றும் நீதி கிடைக்க ஜேட்லி உறுதி செய்வார்.

மேலும், வீரர்களுக்கு ஏதும் சங்கடம் என்றால் எந்த நேரத்திலும் உடனடியாக அருண் ஜேட்லியை அணுகலாம்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x