

சி.கே.நாயுடு வாழ்நாள் கிரிக்கெட் சாதனை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தன் விளையாடிய காலத்தில் தனக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டதை தனது சுயசரிதை நூலில் வெளிப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
அதாவது சக வீரர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டது பற்றி வெளிப்படுத்தியே தீருவேன், எத்தனை காலம்தான் வாயைத் திறக்காமல் இருப்பது என்று அவர் கேட்டுள்ளார்.
2011 உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்த சுயசரிதை நூலை அவர் வெளியிட இருந்ததாகவும் ஆனால் வெளியிட வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “நான் சிலரது ஈகோவுக்கு பலிகடாவாகியுள்ளேன். இது எனக்கு நிகழ்ந்தது. என்னுடன் விளையாடியவர்கள் அணித் தேர்வாளர்களாகியுள்ளனர். ஆனால், 1986 முதல் 1993 வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியுள்ளேன், அதுவும் சிறப்பான ஆட்டத்தை இந்தக் காலக்கட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். உடல்தகுதியுடனும் சிறப்பாகத் திகழ்ந்தேன். என்னைச் சுற்றி எந்த வித சர்ச்சைகளும் இல்லை. ஆனாலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து எனது புத்தகத்தில் இடம்பெறும்.
அனைத்துக்கும் காலம் பிறக்க வேண்டும், இப்போது சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதுதான் சரியான தருணம்.
புத்தகத்தின் தலைப்பு ஈர்ப்பதாக இருக்கும். சர்ச்சைக்குரிய தலைப்பென்றால் நன்றாக விற்பனையாகும்” என்றார்.
கர்நாடகா கிரிக்கெட் சங்க இயக்குநராக தன் பதவிக்காலம் நீட்டிக்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்த கிர்மானி, “6 ஆண்டுகள் கர்நாடகா கிரிக்கெட் சங்க இயக்குநராக பதவியிலிருந்தேன். பிறகு எனது சேவைக்காக நன்றி என்றனர். எதற்காக நன்றி? நான் மோசமாக நிர்வகித்தேனா? எந்த அடிப்படையில்? இது வெறும் ஈகோவினால் ஏற்பட்டதே. அவர்களுடைய நாற்காலி அதிகாரம் பேசுகிறது, பணபலம் பேசுகிறது என்ன செய்ய?” என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் சில அயல்நாட்டு வீரர்களை கேப்டனாக நியமிக்கும் போக்கு பற்றி கூறிய கிர்மானி, “நாம் ஏன் நம் வீரர்களை ஊக்குவிப்பதில்லை? நம்மிடம் பயிற்சியாளராகவும், கேப்டன்களாகவும் திறமை படைத்தவர்கள் நிறைய உள்ளனர்” என்றார்.
டெல்லி டேர் டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் கடந்த ஐபிஎல் தொடரில் அயல்நாட்டு கேப்டன்களே நியமிக்கப்பட்டனர்.
“ஈகோ என்ற வார்த்தை உலக அளவில் பிரச்சினையான வார்த்தையே. ஒவ்வொரு படைப்பிலும் அது உள்ளடங்கியுள்ளது. நாம் ஏன் நம் நாட்டு வீரரை, நம் மாநில வீரரை மதிக்க வேண்டும். அவர் தன்னை விட நன்றாக ஆடி விடுவார். தன்னைவிட அதிகன் சம்பாதித்து விடுவார் எனவே அவரை தடுப்போம். ஏன் இந்த ஈகோ? ஒருவரது திறமையையும், நேர்மையையும் பாராட்டுவதற்குப் பதிலாக நாம் அவரை வீழ்த்துகிறோம். இது சரியல்ல” என்ற கிர்மானி, தான் பயிற்சியாளர் பொறுப்புக்காக அலையவில்லை, ஆனாலும் கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.