Last Updated : 22 Apr, 2021 07:41 AM

 

Published : 22 Apr 2021 07:41 AM
Last Updated : 22 Apr 2021 07:41 AM

சிஎஸ்கே போராடி வெற்றி: தோனி படைக்கு தோல்வி பயத்தை காட்டிய ரஸல், கம்மின்ஸ்: 200 ரன்களுக்கு மேல் அடித்ததால் தப்பித்தது ‘யெல்லோஆர்மி’

கொல்கத்தா அணி தோற்றாலும் ஆட்டத்தை ரசிக்க வைத்த ஆன்ட்ரூ ரஸல், கம்மின்ஸ் | படம் உதவி ட்விட்டர்

மும்பை


தீபர் சஹரின் அற்புதமான பந்துவீச்சு, டூப்பிளசிஸ், கெய்வாட்டின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்களில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்தது. 221 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

வெற்றிக்குப்பின் தோனியுடன் செல்லும் சக சிஎஸ்கே வீரர்கள்

முதலிடத்தில் சிஎஸ்கே

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து, மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளது. அதேசமயம், கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்திக்கிறது, 4 போட்டிகளில் 3 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த டி20 போட்டிகளில் இதுவரை எந்த அணியும் 200 ரன்களுக்கு மேல் அடித்த ஸ்கோரை சேஸிங் செய்ததே இல்லை என்ற வரலாறு அப்படியே இருக்கிறது.

சிக்ஸர் மழை

இந்த ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கும், வலுவான பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியாக இருந்தது. கொல்கத்தா அணியின் சேஸிங்கில் முதல் 5 ஓவர்கள் வரை ஆட்டத்தில் ஸ்வாரஸ்யம் இல்லை. ரஸல் களமிறங்கியபின் ஆட்டத்தில் அனல் பறந்தது, அதன்பின் பரபரபப்பு தொற்றிக் கொண்டது.

போட்டிமுடிந்தபின் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட கேப்டன்கள் தோனி, மோர்கன்

இரு அணி பேட்ஸ்மேன்களும் சேர்த்து இந்தப் போட்டியில் மொத்தம் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளனர், இதில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கம்மின்ஸ், ரஸல், கார்த்திக் 3 பேரும் சேர்ந்து 16 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். மொத்தம் 33 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ஸ்கோருக்கு தொடக்க ஆட்டக்காரர் டூப்பிளசிஸ், கெய்க்வாட் இருவரின் ஆட்டம்தான் முக்கியக் காரணம். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைத்ததைப் பயன்படுத்தி இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

ஆட்டநாயகன்

60 பந்துகளில் 95 ரன்கள் (4சிக்ஸர்,9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த டூப்பிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். துணையாக ஆடிய கெய்க்வாட் கடந்த 3 போட்டிகளில் சொதப்பியபோதிலும், தன் மீது சிஎஸ்கே அணி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி 42 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஆட்டநாயகன் விருது வென்ற டூப்பிளசிஸ்

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 115 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக அதிகபட்ச தொடக்கவீரர்கள் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர். மற்றவகையில் மொயின் அலி(25),தோனி(17) ரன்கள் சேர்த்தனர்.

சஹர் சிறப்பு

வெற்றிக்கு முக்கியக் காரணமானவர்களில் ஒருவர் தீபர் சஹர். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானத்திலும் பந்தை நன்றாக ஸ்விங் செய்து கொல்கத்தா அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேரை வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 2-வதுமுறையாக சஹரின் விக்கெட் வேட்டை தொடர்ந்தது.

நிலைமை மாறியிருக்கும்....

உண்மையில் சிஎஸ்கே அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றி என்று கூற முடியாது. தோல்வியிலிருந்து தப்பிப்பிழைத்து வெற்றியைப் பெற்றுள்ளது சிஎஸ்கே அணி என்றுதான் சொல்ல முடியும். தீபக் சஹர், இங்கிடி மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டோம், இனிமேல் வெற்றி நமதே என்றே என்று நிம்மதியாக சிஎஸ்கே இருந்திருப்பார்கள்.

வெளுத்து வாங்கிய ரஸல்

ஆனால், ரஸலும், கம்மின்ஸும், கார்த்திக்கும் சிஎஸ்கே அணியின் நிம்மதியைக் குலைத்து, ஹார்ட் பீட்டை எகிறவிட்டனர். கடைசிஓவரின் முதல் பந்தில் பிரசித் கிருஷ்ணா ரன் அவுட் ஆகாமல், கம்மின் களத்தில் நின்றிருந்தால் தாக்கூர் நிலைமயும் சிஎஸ்கே நிலைமையும் அதோகதிதான்.

அதுமட்டுமல்ல, சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு குறைவாக அடித்திருந்தாலோ அல்லது, கொல்கத்தா அணியில் ரஸல்,தினேஷ் கார்த்திஸ் இருவரில் யாரேனும் ஒருவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தாலோ சிஎஸ்கே நிலைமை நினைத்துபார்க்கவே பரிதாபமாக இந்தது, என்ன கதை கந்தலாகியிருக்கும்.

பந்துவீச்சு பலவீனம்

சிஎஸ்கே பந்துவீச்சின் தரம் என்னவென்று இந்தப் போட்டியில் தெரிந்துவிட்டது. பந்துவீச்சுக்கு ஏற்ற கடினமான ஆடுகளத்தில் மட்டுமே பந்துவீசத் தகுதியானவர்கள் என்பதை தாக்கூர், சாம்கரன், இங்கிடி, சஹர் நிரூபித்துவிட்டார்கள்.

அதிலும் சாம்கரன் 4 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கினார். சிஎஸ்கே வரலாற்றிலேயே மோகித் சர்மாவுக்கு அடுத்தார்போல் இது மோசமான பந்துவீச்சாகும். 2015 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோகித் சர்மா 58 ரன்களை வழங்கி்னார், அதன்பின் சாம்கரன் நேற்று வள்ளலாகினார்.

4 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்திய தீபக் சஹர்

ஜடேஜா சூப்பர்

மற்றவகையில் பேட்டிங்கிற்கு சவாலான இதுபோன்ற ஆடுகளத்தில் சற்று நுணுக்கமாக வீசுவதில் ஜடேஜா மட்டுமே தேறுகிறார். இந்த ஆட்டத்தில் ஜடேஜாவின் பந்துவீச்சு மட்டுமே தரத்துடன் இருந்தது. ரஸலுக்கும், தினேஷ் கார்த்திக்கும் சவாலாகவும் இருந்தது. மற்றவகையில் ரஸல் காட்டுத்தனமான ஃபார்மில் இருந்தபோது, தீபக் சஹரும், இங்கிடியும் கூட தப்பிக்கவில்லை.

தோனிக்கு நம்பிக்கை

சிஎஸ்கே அணி வென்றுவிடும் என்று தோனி்க்கு வீரர்கள் மீது இருந்த நம்பிக்கையைவிட, அடித்த ஸ்கோர் மீதுதான் இருந்திருக்க வேண்டும். கட்டுக்கோப்பாக வீசிய இங்கிடி, ஜடேஜா, சஹர் மூவருக்கும் ஓவர் முடிந்துவிட்டது.

சாம்கரன், தாக்கூர் ஓவரைக் கொடுத்தால் வெளுத்துக்கட்டுகிறார்கள் என்ற அச்சத்துடனே என்ன செய்வது என யோசித்தார். சிஎஸ்கே 20 ரன்கள் குறைவாக அடித்திருந்தாலோ, அல்லது கொல்கத்தா அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கம்மின்ஸுக்கு துணையாக இருந்திருந்தாலோ வெற்றி சிஎஸ்கேவுக்கு இருந்திருக்காது.

அதிரடியாக களம்புகுந்து சிக்ஸர் விளாசிய தோனி

"தல" சாதனை

எல்லோரும் சாதனை படைக்கும்போது நானும் படைக்ககூடாது என்பது தல தோனியும் நேற்று சாதனைபடைத்தார். ஐபிஎல் தொடரில் 150-வது டிஸ்மிஸலை நேற்று செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமான டிஸ்மிஸல் செய்த விக்கெட் கீப்பர் எனும் பெருமையைப் பெற்றார்.

அதுமட்டுமல்ல சுனில் நரேன் பந்துவீச்சில் முதல்முறையாக தோனி பவுண்டரி அடித்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் சுனில் நரேன் 80 பந்துகளைச் சந்தித்துள்ள தோனி அதில் 39 ரன்கள் மட்டுேம சேர்த்திருந்தார், பவுண்டரிகூட அடித்தது இல்லை. 2 முறை ஆட்டமிழந்துள்ளார். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக நேற்று பவுண்டரி அடித்து தோனி சாதனையாளராகினார்..!

ரசிக்க வைத்த ரஸல்

சாவு பயத்தை காட்டிங்டாங்கடா பரமா….. என்று திரைப்படத்தில் ஒருவசனம் வரும் அதுபோல், ரஸலும், கம்மின்ஸும் சேர்ந்து சிஎஸ்கே அணிக்கு தோல்வி பயத்தை காட்டிவிட்டனர்.

ஷர்துல் தாக்கூர், சாம் கரன் இருவரும் ரஸலுஸ்ஸும், கம்மின்ஸுக்கும் பந்துவீச வருவதற்கே தயக்கம் காட்டினர். அதிலும் ரஸல் நேற்று ஏதோ தீர்மானத்துடன்தான் களமிறங்கியிருக்கக்கூடும் போல் தெரிகிறது.
களமிறங்கியவுடனே இங்கிடி பந்துவீச்சில் 2பவுண்டரி, ஒரு சிக்ஸரை ரஸல் விளாசினார்

ஆட்டத்தின் ஹீரோக்கள் ரஸல், கம்மின்ஸ்

. அதன்பின் சஹர் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள். ஷர்துல் தாக்கூர் வீசிய 10-வது ஓவரில் 6 சி்்க்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களை பொளந்துகட்டினர். ரஸல் வெளுத்துக்கட்டியதைப் பார்த்து தாக்கூர் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் பக்கம் வைடாக பலபந்துகளை வீசியது காமெடி.

மீண்டும் வின்டேஜ் ரஸலை நினைவுபடுத்தியது நேற்றைய ரஸலின் ஆட்டம், 21 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் எனும் பெருமையை ரஸல் பெற்றார். 22 பந்துகளில் 54 ரன்கள்(6சிக்ஸர்,4 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். சாம் கரன் பந்துவீச்சில் இடது ஸ்டெம்பை காட்டி ரஸல் விளையாடியிருக்கத் தேவையில்லை, தேவையில்லாமல் விக்கெட்டை ரஸல் பறிகொடுத்தார்.

ரஸல், கம்மின்ஸ் தாக்குதலில் இருந்து தப்பித்தது ஜடேஜா மட்டும்தான் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள்.

கதறவிட்ட கம்மின்ஸ்

கம்மின்ஸ் களமிறங்கியபின் ஆட்டத்தில் மீண்டும் அனல் பறந்தது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை கதறவிட்டார் கம்மின்ஸ். கம்மின்ஸ் களமிறங்கிய தான் சந்தித்த 2-வது பந்தில் சாம் கரன் வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார்.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட கம்மின்ஸ்

அதன்பின் சாம் கன் வீசிய 16-வது ஓவரில்தான் அந்த கண்கொள்ளா காட்சி அரங்கேறியது. அடியாஅது…..அப்பப்பா….4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 30 ரன்களை கம்மின்ஸ் வெளுத்து வாங்கினார். 8-வது வரிசையில் வந்த டெய்ல்எண்டர் பேட்ஸ்மேன் இந்த சாத்து சாத்துவதா……23 பந்துகளில் அரைசதம் அடித்த கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிலும் சாம் கரனின் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசினார் கம்மின்ஸ்.ஐபிஎல் வரலாற்றிலேயே மிகமோசமாக பந்துவீசிய ரன்களை வாரி வழங்கிய 3-வதுபந்துவீச்சாளர் என்ற பெயரை சாம்கரன் பெற்றார்.
8-வது வீரராக் களமிறங்கி அதிகபட்சமாக ஸ்கோர் செய்த வீரர் எனும் பெருமையை கம்மின்ஸ்(64)பெற்றார். இதற்கு முன் 2015ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் 54 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.

அரைசதம் விளாசிய கம்மின்ஸ்

தனது 200வது ஐபிஎல்போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 40 ரன்கள் சேர்த்து தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்தார். ரஸல், கார்த்திக் சேர்த்து அமைத்தக் கொடுத்த 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தோல்விக்கு காரணம்

கொல்கத்தா அணியைப் பொறுத்துவரை நேற்றை போட்டியில் தோல்விக்கு மூன்று முக்கியக் காரணங்களைக் குறிப்பிட வேண்டும். பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்தது, டாப் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேன்கள் மடமடவென சரிந்தது, கடைசி ஓவரில் ரன்களை அடிக்கவிட்டது ஆகிவைதான் காரணம்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக்

ஊரின் பின்கோடு போன்று டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கில்(0),ராணா(9), திரிபாதி(8),மோர்கன்(7), நரேன்(4) என வரிசையாக ஒற்றைபடை ரன்னில் வெளியேறினர். டாப்ஆர்டரில் மோர்கன், திரிபாதி, கில் என யாரேனும் ஒருவர் ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை நகர்த்தியிருந்தால் வேறுவிதமாகச் சென்றிருக்கும். கடைசி 2 ஓவர்களில் மட்டும் கொல்கத்தா அணி 33 ரன்களை வழங்கியது. இந்த ரன்களை கட்டுப்படுத்தியிருந்தாலே நேற்ற ஆட்டம் கொல்கத்தா பக்கம் சென்றிருக்கும்.

ஆட்டத்துக்கு ஸ்வாரஸ்யத்தையும் பரபரப்பையும் ரஸல்(54), தினேஷ் கார்த்தி்க்(40), கம்மின்ஸ்(64) ஆகியோர்தான் ஏற்படுத்தினர்.

ஒரு ரன் ஒடியிருக்க கூடாது

அதிலும் கடைசி இரு ஓவர்களில் வெற்றி்க்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. பட்டை களப்பும் ஃபார்மில் இருந்த கம்மின்ஸ், ஸ்ட்ரைக்கை தக்கவைக்க அவர் எடுத்த முயற்சிகளும், போராட்டமும் பாராட்டுக்குரியவை.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது.

விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய வருண்சக்ரவர்த்தி

தீபக் சஹர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில்கூட கம்மின்ஸ் ஒருரன் ஓடியிருக்கத் தேவையில்லை, 2-வது ரன்னுக்குவந்தபோதுதான் பிரசித் கிருஷ்ணா ஆட்டமிழந்தார். ஸ்ட்ரைக்கை தக்கவைத்து, தாக்கூர் பந்துவீச்சில் பேட்டை சுழற்றியிருந்தால், நிச்சயம் சிக்ஸர், பவுண்டரி பறந்திருக்கும்.19.1ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்னில் தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x