Published : 10 Dec 2015 09:18 AM
Last Updated : 10 Dec 2015 09:18 AM

நூடுல்ஸ் விற்கும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைக்கு அரசு பணி வழங்க முடிவு

குஜராத்தில் நூடுல்ஸ் விற்கும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு அரசு வேலை வழங்க முன்வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பா குப்தா(21). துப்பாக்கி சுடுதலில் தேசிய அளவில் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த புஷ்பாவுக்கு, தேசிய மாணவர் படையில் சேர்ந்த பின்னரே தனக்குள் துப்பாக்கிச் சுடும் திறமையும், ஆர்வமும் இருப்பதை தெரிந்து கொண்டார்.

தேசிய மாணவர் படை அளித்த ஆதரவில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தார். அத்துடன் ராணுவம் அளித்த உதவியால் பல்வேறு துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். குஜராத் மாநில விளையாட்டுத்துறை நடத்திய தேசிய அளவிலான புஷ்பா குப்தா கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தேசிய மாணவர் படையும், ராணு வமும் அளித்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதனால் புஷ்பா மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சியில் ஈடுபடவும் முடியவில்லை. தற்போது இறுதி ஆண்டு படித்து வரும் புஷ்பா குப்தா, குடும்ப வறுமையின் காரணமாக தனது தந்தையின் ஆலோசனைப்படி மாலை நேரங்களில் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் விற்று வருகிறார்.

பயிற்சியை நிறுத்தி ஒராண்டு ஆண்டு ஆன நிலையில் தான் வென்ற பதக்கங்களை தள்ளுவண்டியில் தொங்கவிட்டு அவ்வப்போது ஏக்கத்துடன் பார்த்தப்படி உள்ளார் புஷ்பா குப்தா. பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலத்தில் இருந்து ஒரு மாணவி, விளையாட்டு துறையில் சாதித்தும் வறுமையின் காரணமாக நூடுல்ஸ் விற்றுவருவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்நிலையில் குஜராத் மாநில அரசின் உர நிறுவனம், மாணவி புஷ்பா குப்தாவிற்கு வேலை வழங்க முன்வந்துள்ளது. 21 வயதாகும் புஷ்பா தனது கல்லூரி படிப்பை முடித்ததும் பணி வழங்கப்படும், மேலும் அவர் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகள் செய்யப்படும் என உர நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே.நந்தா தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x