Last Updated : 21 Apr, 2021 03:15 AM

 

Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: நடுவராகவும் ஜொலித்த சுழற்பந்து வீச்சாளர்

சர்வதேச கிரிக்கெட் உலகில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவரான எஸ்.வெங்கட்ராகவனின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 21).

1970-களில் பிரசன்னா, பேடி, சந்திரசேகர் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்திவந்த காலத்தில், அவர்களையும் மீறி இந்தியாவின் நட்சத்திரமாக ஜொலித்தவர் வெங்கட்ராகவன். அவரது காலத்தில் இந்திய அணியில் பல சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், வெங்கட்ராகவனுக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் பேடி, பிரசன்னா அகியோருக்கு கிடைத்த முக்கியத்துவம் வெங்கட்ராகவனுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் களைத்துப் போகும் நேரத்தில்தான் வெங்கட்ராகவனிடம் பந்து வழங்கப்பட்டது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், விக்கெட்களை கொய்தார்.

1975 மற்றும் 1979-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் ஒரு கேப்டனாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. அந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த கோஷ்டி மனப்பான்மை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

1965 முதல் 1983-ம் ஆண்டு வரை நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்தாலும் 57 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய வெங்கட்ராகவன், 156 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விட ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறந்து விளங்கிய வெங்கட்ராகவன், இத்தொடரில் 530 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ரஞ்சி போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

1983-ல் கிரிக்கெட் வீரராக ஓய்வுபெற்ற பிறகு, 1993-ம் ஆண்டு கிரிக்கெட் நடுவராக மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கினார். துல்லியமான தீர்ப்புகளால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். டேவிட் ஷெப்பேர்ட், டிக்கி பேர்ட் ஆகியோருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் நடுவர் என்ற அந்தஸ்தைப் பெற்று, தமிழர்களை தலைநிமிர வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x