

24 வயதில் கிரிக்கெட் விளையாடும்போதே என்னுடைய ஆட்டத்துக்கு நான் உத்தரவாதம் அளித்தது இல்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. எங்கிருந்து நான் உத்தரவாதம் கொடுக்க முடியும் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வலுவாகத்தான் இருந்தது. 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேட்டிங்கில் தோனியின் பழைய வேகம், ஷாட்களில் துல்லியம் போன்றவற்றைக் காண முடியவில்லை. இருப்பினும் ஏதோ சமாளித்து 18 ரன்களைச் சேர்த்து தோனி ஆட்டமிழந்தார்.
வெற்றிக்குப் பின் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:
''சாம் கரன், தீபக் சஹர் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினார். தீபக் சஹர் வழக்கத்தைவிட அதிகமான நக்குல் பந்துகளை வீசினார். நல்ல தொடக்கம் எப்போதும் அவசியம்.
ஜாஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிப்பார் என்று நான் கருதவில்லை. பந்து ஈரமில்லாமல் இருக்கும்போது சுழல்வதைவிட, ஈரமாக இருக்கும்போதுதான் அதிகமாகச் சுழலும். மொயின் அலி அவரி்ன் பணியைச் சரியாகச் செய்து வருகிறார், 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடுகளம் சிறிது கடினமாக இருந்தபோதிலும் மொயின் அலியின் பந்துவீச்சு சிறப்பாகஇருந்தது.
நாம் விளையாடும்போது யாரும் உடல் தகுதியுடன் இல்லை என்று சொல்லிவிடக் கூடாது. நான் இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறேன் என்பதால், அவர்களுக்கு இணையாக ஓட வேண்டும். அதனால் உடல் தகுதியோடு இருக்க வேண்டும். இது சவாலான விஷயம்தான்.
ஆட்டத்தைப் பொறுத்தவரை நான் 24 வயதிலேயே ஆட்டத்துக்கு (பேட்டிங்) உத்தரவாதம் கொடுத்தது இல்லை. அப்படி இருக்கும்போது இப்போது எனக்கு 40 வயதாகும்போது ஆட்டத்துக்கெல்லாம் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால், நான் உடல் தகுதியோடு இல்லை என்று குறைந்தபட்சம் யாரும் என் மீது குற்றம் கூறாதவாறு உடலை வைத்திருப்பது எனக்குச் சாதகமான விஷயம்''.
இவ்வாறு தோனி தெரிவி்த்தார்.