

இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடரில் டுனிடினில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு ஹாமில்டனில் தொடங்குகிறது. இந்த மைதானமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் அனுபவம் இல்லாத இலங்கை வீரர்களுக்கு சோதனை களமாகவே அமையும். டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
கடைசியாக இங்கு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளும் கடைசி நாள் வரை சென்றதில்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த இரு ஆட்டமும் 3 நாட்களில் முடிவடைந்தது.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நியூஸி. வெற்றி பெற்றிருந் தது. இந்த ஆட்டம் 4 நாட்கள் வரை சென்றது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை குவித்துள்ள நியூஸிலாந்து அணி, இந்த டெஸ்டில் இலங்கை அணியை வீழ்த்தினால் 1987 முதல் 1991 வரை தொடர்ச்சியாக பெற்ற 13 வெற்றிகளின் சாதனையை சமன் செய்யும்.