Last Updated : 20 Apr, 2021 03:13 AM

 

Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: மல்யுத்தத்தில் புதிய நட்சத்திரம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் கடந்த வாரம் இடம்பிடித்துள்ளார் 19 வயதே ஆன அன்ஷூ மாலிக். கஜகஸ்தானில் நடந்த ஏஷியன் ஒலிம்பிக் குவாலிபயர்ஸ் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். இப்போட்டியில் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையான கொரியாவின் ஜீன் அம், கஜகஸ்தானின் எம்மா டிசினா ஆகியோரை அவர் வீழ்த்தியது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

அன்ஷூ மாலிக், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா தரம்வீர், மாமா பவன், சகோதரர் ஷுபம் ஆகியோரும் மல்யுத்த வீரர்கள். சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள். இவர்களைப் பார்த்து அன்ஷூ மாலிக்குக்கும் மல்யுத்த போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத்துறையில் தானும் ஈடுபடப் போவதாக அன்ஷூ கூறியதும், ஒட்டுமொத்த குடும்பமும் இம்முடிவை வரவேற்றுள்ளது.

இதுபற்றி கூறும் அன்ஷூவின் அப்பா தரம்வீர், “மல்யுத்த வீராங்கனையாக வேண்டும் என்று அன்ஷூ கூறிய நாளிலேயே, அவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அந்த ஆசை இன்று நிறைவேறிவிட்டது” என்கிறார்.

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கு முன்பு காயங்களுடனும் போராடியுள்ளார் அன்ஷூ. கடந்த மாதம் ரோம் நகரில் நடந்த மாட்டோ பெலிகான் ராங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்றபோது, அவரது முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க முடியுமா என்பது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அந்த சவாலைக் கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் அன்ஷூ.

ஒலிம்பிக் போட்டியில் 4 முறை தங்கப்பதக்கம் வென்ற கவோரி இசோதான் அன்ஷூவின் ரோல் மாடல். அவரைப் போலவே தானும் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார் அன்ஷூ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x