Published : 28 Jun 2014 05:08 PM
Last Updated : 28 Jun 2014 05:08 PM

பிரேசில்-சிலி; உருகுவே கொலம்பியா ஆட்டம்: சில சுவையான தகவல்கள்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பான இறுதி-16 சுற்றிற்கு வந்துள்ளது. இன்று 9.30 மணி ஆட்டத்தில் சிலி-பிரேசில் அணிகள் மோதுகின்றன. அதிகாலை 1.30 மணி ஆட்டத்தில் உருகுவே-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

பொதுவாக கால்பந்தாட்டத்தில் அன்றைய ஆட்டமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்றாலும் வரலாற்று நினைவுகளும் கூடவே நிழல் போலத்தொடரும், அந்த விதத்தில் பார்த்தால் பிரேசில் அணியின் கை உயர்ந்திருக்கிறது.

இதுவரை பிரேசில், சிலி அணிகள் 68 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 48 முறை வெற்றி பெற்றுள்ளது. 13போட்டிகள் டிரா ஆகியுள்ளது. 7 போட்டிகளில் சிலி வெற்றி பெற்றுள்ளது.

சிலி அணிக்கு எதிராக பிரேசில் 159 கோல்களை அடித்துள்ளது. ஆனால் 58 கோல்களையே வாங்கியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் பிரேசில் 40 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடையாமல் இருந்து வருகிறது. 2002ஆம் ஆண்டு பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்னில் 1-0 என்று தோற்றது பிரேசில்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் சிலியுடன் இறுதி 16 சுற்றில் இன்று 3வது முறையாக மோதுகிறது பிரேசில். அதுவும் இதே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலி அணி இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கோல் கணக்கிலும், அதிர்ச்சிகரமாக ஸ்பெயின் அணியை 2-0 என்றும் வீழ்த்தியுள்ளது. நெதரலாந்தை கதி கலக்கினாலும் 0-2 என்று தோல்வி தழுவியது. இந்த ஆட்டங்களில் சில வீர்ர்களுக்கு மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டுள்ளது. பிரேசில் போலவே 4 முக்கிய வீரர்கள் இந்த அணியிலும் மீண்டும் ஃபவுல் செய்து அகப்பட்டால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாது போகலாம்.

மாறாக கொலம்பியா-உருகுவே போட்டியில் உருகுவேயின் சுவாரேஸ் தடை செய்யப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவே. அவரது இடத்தை இட்டு நிரப்பும் வீரர்கள் இல்லை என்றே கூறிவிடலாம்.

ஆனால் கொலம்பியா அணி 10 சர்வதேச போட்டிகளில் தோல்வியடையாமல் இப்போது நாக் அவுட் சுற்றுக்கு வந்துள்ளது. 1996ஆம் ஆண்டு கொலம்பியா அணி 11 சர்வதேச போட்டிகளில் தோல்வி தழுவாமல் சாதனை படைத்துள்ளது. இன்று அந்தச் சாதனையை சமன் செய்யுமேயானால் உருகுவே நிலை அவ்வளவுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x