Last Updated : 19 Apr, 2021 03:15 AM

 

Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: திருமணம் தந்த திருப்பம்

நீளம் தாண்டும் போட்டியில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கவிட்ட அஞ்சு பாபி ஜார்ஜின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 19).

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்ஙனாசேரி எனும் ஊரில் 1977-ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இவரது அப்பா மார்கோஸ், தனது மகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை சிறு வயது முதலே ஊக்குவித்து வந்தார். பள்ளிக் காலத்தில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டப் போட்டியில் மாநில அளவில் பதக்கங்களை குவித்தார். கோழிக்கோடில் உள்ள விமாலா கல்லூரியில் படித்த காலத்தில், அங்கு சக தடகள வீரராக இருந்த பாபி ஜார்ஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பல்வேறு போட்டிகளில் கவனம் செலுத்திவந்த அஞ்சுவிடம், நீளம் தாண்டும் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு பாபி ஜார்ஜ் அறிவுறுத்தினார். தானே அஞ்சுவுக்கு பயிற்சியாளராகவும் மாறினார். இதைத்தொடர்ந்து நீளம் தாண்டும் போட்டிகளில் முழு கவனத்தை செலுத்திய அஞ்சு, 2001-ம் ஆண்டு நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 6.74 மீட்டர் நீளம் தாண்டி புதிய தேசிய சாதனையை படைத்தார்.

இதைத்தொடர்ந்து 2002-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம், 2003-ம் ஆண்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் என்று அஞ்சுவின் காட்டில் பதக்க மழை பெய்தது. 2001-ம் ஆண்டில் சர்வதேச நீளம் தாண்டும் வீராங்கனைகளுக்கான ராங்கிங் பட்டியலில் 61-வது இடத்தில் இருந்த அஞ்சு, 2003-ம் ஆண்டில் 6-வது இடத்துக்கு முன்னேறினார்.

தடகள விளையாட்டில் இருந்து 2008-ம்ஆண்டில் ஓய்வுபெற்றாலும், அஞ்சு பாபி விளையாட்டு அறக்கட்டளை மூலம், ஏழ்மை நிலையில் உள்ள பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x