Published : 19 Dec 2015 10:06 AM
Last Updated : 19 Dec 2015 10:06 AM

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் மனோஜ் பிரபாகர் நியமனம்

டி 20 உலககோப்பையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் (52) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமைப்பயிற்சியாளர் இன்சமாமுடன் இணைந்து செயல்பட உள்ளார்.

இதுதொடர்பாக மனோஜ் பிரபாகர் கூறும்போது, "கடந்த 5 நாட்களாக ஆப்கானிஸ்தானின் 19வது வயதுக்குட்பட்டோருக்கான அணியினருடன் கிரேட்டர் நொய்டா மைதானத்தில் பணிபுரிந்து வருகிறேன். வீரர்களின் திறமை பிரமிக்கும் வகையில் உள்ளது. பயிற்சியாளர் எதை விரும்புகிறாரோ அதை சரியாக செய்கின்றனர்.

தலைமை பயிற்சியாளர் இன்சமாமும் நானும் இணைந்து, இளம் வீரர்களுக்கு பயிற்சியின் போது உதவிகள் செய்தோம்" என்றார்.

ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் துபையில் நடைபெற உள்ளது. இதற்காக விசாவிற்கு விண்ணப்பித்துள்ளேன். விசா வந்தவுடன், துபையில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைவேன். எங்களது அணி டி 20 உலககோப்பையில் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆப்கானிஸ்தான் நிச்சயமாக ஒரு சில நட்சத்திர வீரர்களை உருவாக்கும்.

எனது சொந்த மாநிலத்தில் உள்ள டெல்லி கிரிக்கெட் சங்கம் எனது சேவையை பயன்டுத்திக்கொள்ள நினைத்ததில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உதவி செய்த ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவிற்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று தெரிவித்தார்.

52 வயதான மனோஜ் பிரபாகர் தான் விளையாடிய காலக்கட்டங்களில் ஸ்விங் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டவர். டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் 2011-2012 ரஞ்சி கோப்பை சீசன் தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். அணி வீரர்கள் மற்றும் தேர்வுக்குழுவினர் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் மனோஜ் பிரபாகர் பதவியை இழக்க நேரிட்டது.

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை டி 20 தொடருக்கான தகுதி சுற்றில் 7 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி மார்ச் மாதம் நடைபெறும் டி 20 உலககோப்பை தொடரின் முதல் கட்ட ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது. பி பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஹாங்காங், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் இருந்து ஒரு அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்று சாதனை படைத்திருந்தது. மேலும் அபுதாபியில் ஓமனுக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரையும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x