

இந்த தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வதென்றே தெரியவில்லை, என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆழமான பேட்டிங் இல்லாவிட்டால் வெற்ற பெற முடியாது என சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் வேதனையுடன் குறிப்பி்ட்டார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.
சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் இருவரைத் தவிர வேறு எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை எந்தவீரரும் கடைசிவரை பயன்படுத்தவி்ல்லை.
ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிலும் கடைசி 8 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது ஒட்டுமொத்த பேட்டிங் தோல்வி.
இந்த தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தத் தோல்வியை எவ்வாறு எடுத்துக்கொள்வது, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.எங்கள் தோல்விக்கு காரணமே ஆழமான பேட்டிங் இல்லாததுததான். கடைசிவரை நின்று ஒருவர்கூட பேட்டிங் செய்யவில்லை. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், ஆழமான பேட்டிங் இல்லாதவரை ஒரு போட்டியில்கூட வெல்ல முடியாது.
ஹர்திக் பாண்டியாவின் சிறந்த பீல்டிங்கால் நான் விக்கெட்டை இழந்தேன். ஆனால் கிரிக்கெட்டைப் பொருத்தவரை 150 ரன்கள் என்பது எளிதாக அடைந்துவிடக்கூடிய இலக்குதான். சரியான பார்டனர்ஷிப் மட்டும் கிடைத்துவிட்டால், ஒரு முனையில் அவரை நிறுத்திவிட்டு,எளிதாக இலக்கை அடைந்துவிடலாம்.
இப்போதுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட் அவசியம். அதிலும் நடுவரிசை வீரர்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட்டை எவ்வாறுவிளையாடுவது என்பது தெரியவேண்டும். பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள், ஆடுகளம் மெதுவானதாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் பந்துவீசினர்.
தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும், அடுத்தபோட்டியில் பேட்டிங் வரிசை ஆழமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்களை சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டார்கள், நாம் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வெற்றி அவசியம், வெற்றி இருந்தால்தான் புன்னகைவரும்.
வில்லியம்ஸன் உடல்நிலை குறித்து அணியின் உடற்தகுதி நிபுணரிடம் பேசுவேன், உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும்
இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.