Last Updated : 24 Dec, 2015 03:40 PM

 

Published : 24 Dec 2015 03:40 PM
Last Updated : 24 Dec 2015 03:40 PM

ஆஸ்திரேலிய அணியை இம்முறை தோற்கடிக்கலாம்: விவிஎஸ் லட்சுமண் கருத்து

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி, மூன்று டி 20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக ஜனவரி 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது. ஒருநாள் போட்டி 12ம் தேதியும், டி 20 தொடர் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர்பாக தனியார் தொலைகாட்சி ஒன்றில் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. இதில் ஆஸ்தி ரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கலந்துகொண்டு கூறியதாவது:

ஒருநாள் போட்டி தொடரில் ரெய்னாவை நீக்கியது கடினமான முடிவு தான். எனினும் கடின உழைப்பின் மூலம் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்ப முடியும். எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அந்த வகையில் ரெய்னா ஷாட்பிட்ச் பந்தில் நீண்ட காலமாக தடுமாறி வருகிறார். இந்த மாதிரியான பந்துகளுக்கு எதிராக அவர் எப்படி விளையாட வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

மிக நேர்த்தியாக செயல்படும் பேட்ஸ்மேன்கள் என்று யாரும் இல்லை. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கூட ஆப் ஸ்டெம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்வதில் தடு மாறுகின்றனர். அதேவேளையில் புஜரா ஸ்டெம்புகளுக்கு உள்ளே வரும் பந்தை சரியாக எதிர்கொள்ள மாட்டார். எனவே ஷாட் பிட்ச் பந்து குறித்து ரெய்னா, நிறைய தெளிவு பெற வேண்டும்.

டி 20 போன்ற போட்டிகளில் ரெய்னா தாக்கம் உண்டாக்கக் கூடிய வீரர். அதோடு அவர் சிறந்த மேட்ச் வின்னரும் கூட. ஒருநாள் போட்டியில் ரெய்னா நீக்கப்பட் டுள்ள சமயத்தில் மனிஷ் பான்டே, குர்கீரத்சிங் மான் ஆகியோர் வாய்ப்பை பெற்றுள்ளனர். இரு வருமே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குர்கீரத்சிங்கின் ஆட் டம் ஸ்வாரஸ்யமாக இருந்தது. இந் திய அணியில் வாய்ப்பு கிடைப் பதற்கு அவர் தகுதியானவர் தான்.

தோனி 2019 உலகோப்பை வரை விளையாட வேண்டும். அவர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். ஆஷிஸ் நெஹ்ரா சிறந்த மேட்ச் வின்னர். டி 20 ஆட்டங்களில் முதலில் சில ஓவர்களையும், கடைசி 4 ஓவர்களையும் வீசுவது என்பது வித்தியாசமானது. இந்திய அணிக்காக நெஹ்ரா பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். தற்போதும் அவர் அணியின் சொத்து தான்.

ஒருநாள் போட்டியில் இடம் பிடித்துள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஷரன் சிறப்பாக செயல்படக்கூடியவர் என யுவராஜ்சிங்கும், ஹர்பஜனும் தெரிவித்தனர். பரிந்தர் ஷரன், ஜாகீர்கான் போன்று திறன் கொண்டிருப்பதாக அவர்கள் இருவரும் நம்புகின்றனர். ஆனால் பரிந்தரின் பந்து வீச்சை நான் நேரில் பார்த்தது இல்லை.

இடது கை பந்து வீச்சாளர்கள் எப்போதுமே புதிய கோணத்தை உருவாக்கி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். பரிந்தர் ஷரனும் அவ்வாறு செயல்பட்டால் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும். அனுபவமும், அதை வெளிப்படுத்தும் தன்மை தான் அவரை சிறந்த பந்து வீச்சாளராக உருவாக்கும்.

ஆஸ்திரேலியாவில் பேட்டிங் ஆடும் போது பின்னங்காலில் சென்று நேர் பேட்களில் விளை யாடக்கூடாது. மட்டையின் முழுப் பகுதியும் உள்முகமாக தரையை நோக்கி இருக்க வேண்டும். ஏனெனில் பவுன்ஸ் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்பதால் நேர் பேட்டில் ஆடினால் எட்ஜ் ஆகி ஸ்லிப் பகுதியில் கேட்ச் ஆகிவிடும். மட்டையை கொஞ்சமாக திருப்பி ஆட வேண்டும், மணிக்கட்டைத் தளர்த்த வேண்டும். தொடக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்து விடுதல் கூடாது.

இந்த முறை ஆஸ்திரேலிய தொடரில் சாதிக்க வாய்ப்பு உள்ளது. கிளார்க், ஜாண்சன், ஹாடின் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஸ்டார்க்கும் காயம் அடைந்துள்ளார். இதனால் இந்திய அணி தனது திறமைக்கேற்ப விளையாடினால் ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்கலாம்.

இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார். .



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x