Published : 17 Apr 2021 07:44 am

Updated : 17 Apr 2021 07:44 am

 

Published : 17 Apr 2021 07:44 AM
Last Updated : 17 Apr 2021 07:44 AM

‘திரும்பி வந்தேட்டன்னு சொல்லு’: சிஎஸ்கே மிரட்டல் வெற்றி: சஹர் பந்துவீச்சில் பஞ்சாப் பஞ்சாகப் பறந்தது: 8லிருந்து 2க்கு அணியை ஏற்றிய ஏணி தோனி 

deepak-chahar-stars-in-chennai-super-kings-6-wicket-win-over-punjab-kings
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த தீபக் சஹர் | படம் உதவி ட்விட்டர்

மும்பை


தீபக் சஹரின் ஆகச்சிறந்த பந்துவீச்சால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது.107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து 26 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தி்ல் வென்றது.


8 லிருந்து 2ம் இடம்

ஒரே போட்டி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியிலில் 8-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி, நிகர ரன்ரேட்டையும் உயர்த்திக்கொண்டது.

சிஎஸ்கே அணிக்காக 200வது ஆட்டத்தில் பங்கேற்ற கேப்டன் எம்.எஸ். தோனிக்கு மறக்க முடியாத பரிசாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

2-வது இடத்திலிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, குறைந்த ஸ்கோர் எடுத்து அடைந்த மோசமான தோல்வியால் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

விருட்சமாக எழுவோம்

கடந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு மிகவும் கசப்பானதாக இருந்தது. ஆனால், இந்த சீசனில் அடிக்கும் முதல் அடி வலுவாக இருக்க வேண்டும் என்று எண்ணி மிரட்டலான முதல் வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்துள்ளது.

நாங்கள் எந்த இடத்திலிருந்து வீழ்ந்தாலும் விதையாக வீழ்வோம், விருட்சமாக எழுவோம், சாம்பியனாக மாறுவோம் என்பதற்கு அறைகூவலாக இந்த வெற்றியாக சிஎஸ்கே அணி பதிவு செய்துள்ளது.

ஹீரோ சஹர்

சிஎஸ்கே அணியின் முழுமையான வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், ரவிந்திர ஜடேஜா, மொயின் அலி, டூப்பிளசிஸ் ஆகியோர்தான் காரணம். அதிலும் கடந்த போட்டியில் சொதப்பிய தீபக் சஹர் இந்த ஆட்டத்தில் முற்றிலும் மாறுபட்டு பந்துவீசினார்.

4 ஓவர்கள் வீசிய சஹர் ஒரு மெய்டன், இதில் 18 டாட் பந்துகள் 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

கேப்டன் டச்

தீபர் சஹரின் பந்துவீச்சுக்கு பஞ்சாப் பேட்டிங் வரிசை ஆட்டம் காண்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட கேப்டன் தோனி, தொடர்ந்து சஹருக்கு ஓவர்களை வழங்கி பயன்படுத்தி, பஞ்சாபை நெருக்கடியில் தள்ளினார். இது தோனிக்கே உரித்த “கேப்டன் டச்.”

200-வது போட்டிக்காக கேக் வெட்டிய தோனி

அருமையான பந்துவீச்சு

மயங்க் அகர்வாலை தீபக் சஹர் அவுட்ஆகியதை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆஹா… என்ன மாதிரியான பந்துவீச்சு. மிடில் ஸ்டெம்பில் பிட்ச் ஆகி, லேசான சீமிங்கில், ஆஃ ஸ்டெம்ப்பை பந்து பதம்பார்த்தது. உண்மையில் சஹரின் மிக ஆக்சிறந்த வி்க்கெட்டாக இது அமைந்தது.

பஞ்சாப் அணிக்கு டாப் ஆர்டர்தான் ஒட்டுமொத்த பலம். ஆனால், தீபக் சஹர் பந்துவீச்சில் அகர்வால், கெயில், பூரன், தீபக் ஹூடா ஆகியோர் ஆட்டமிழந்தபோதே ஏறக்குறைய பஞ்சாப் தோல்வி உறுதியானது.

ஜடேஜா பீல்டிங்சிறப்பு

இதில் தீபக் சஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதில் ஒரு விக்கெட்டை ரவிந்திர ஜடேஜாவுக்கு கொடுத்தே ஆக வேண்டும். கிறிஸ் கெயிலுக்கு ஜடேஜா பிடித்த கேட்ச் எதிர்பாராதது. “சிறுத்தை பாய்வது போல் பாய்ந்து” அந்த கேட்ச்சை ஜடேஜா பிடித்ததைப் பார்த்து கெயில் வியப்புடன் வெளியே சென்றார். அதேபோல, கே.எல்.ராகுலை ரன் அவுட் செய்த ஜடேஜாவின் பீல்டிங்கும் அற்புதமானது.

ஷார்ட் கவரில் ஜடேஜா நிற்கும்போது பந்தைப் பிடித்து ஸ்டெம்ப்பை நோக்கி எறிதல் என்பது கடினமானது. ஆனால், குறிபார்த்தை ஸ்டெம்ப்பை அடித்து ராகுலை வெளியேற்றிய ஜடேஜாவின் பீல்டிங் “மாஸ்டர் கிளாஸ்”.

தமிழக வீரரும் பஞ்சாப் அணி வீரருமான ஷாருக்கானுக்கு ஆலோசனை கூறிய தோனி

மொயின் அலி, டூப்பிளசிஸ் இருவரும் அருமையான பார்ட்டனர்ஷிப் அமைத்துக் கொடுத்து சிஎஸ்கே வெற்றியை எளிதாக்கினர். பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை என்ற கூறப்படும் இந்த மைதானத்தில்தான் மொயின்அலி அதிரடியாக ஆடி 7 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸர் உள்பட 46 ரன்களை விளாசினார். டூப்பிளசிஸ் பொறுப்புடன் ஆடி 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மொத்தத்தில் சிஎஸ்கேயின் வெற்றியை தீபக் சஹர் தனது பந்துவீச்சில் உறுதி செய்துவிட்டார்.

பேட்டிங் வரிசை ஆட்டம்
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை அந்த அணி சேர்த்த 106 ரன்கள்தான், ஐபிஎல் வரலாற்றில், மும்பை வான்ஹடே மைதானத்தில் சேர்க்கப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோராகும்.

இதைவிட குறைவாக மும்பை வான்ஹடை மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் அடித்தது இல்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முழுமையான காரணம் பேட்ஸ்மேன்கள் மட்டுமே சீட்டுக்கட்டு சரிவதுபோல் வரிசையாக பவர்ப்ளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகளையும், 6-வது ஓவரில் 5-வது விக்கெட்டையும் இழந்தபோதே ஆட்டம் முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

ஜோர்டன் வரட்டும்

பஞ்சாப் அணியில் மெரிடித், கெய் ரிச்சார்டஸன் இருவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டும் பெரிதாக பந்துவீச்சில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. அர்ஸ்தீப் சிங் நேற்று சிறப்பாகப் பந்துவீசியும் அவருக்கு தொடர்ந்து ராகுல் ஏன் ஓவர்களை வழங்கவில்லை எனத் தெரியவில்லை. அர்ஸ்தீப் சிங் 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அவருக்குதொடர்ந்து 2 ஓவர்கள் அளித்திருந்தால், போட்டி இன்னும் இழுத்திருக்கும்.

பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ள ஜோர்டானை அடுத்தப் போட்டியில் களமிறக்கினால் பஞ்சாப் அணி பந்துவீச்சில் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

ஷாருக்கான் ஆறுதல்

பஞ்சாப் அணியில் ஆறுதலான விஷயம் தமிழக வீரர் ஷாருக்கானுக்கு கிடைத்த அறிமுகம்தான். விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்த நிலையிலும் மனம் தளராமல் ஆடிய தமிழக இளம் வீரர் ஷாருக்கான் ஆட்டம் பாராட்டுக்குரியது. 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசிய ஷாருக்கான்47 ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், பஞ்சாப் நிலைமை மோமசாக இருந்திருக்கும். பஞ்சாப் அணிக்கு சிறந்த அதிரடி வீரராக ஷாருக்கான் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

ஆடுகளத்தின் தன்மையை அறியவி்ல்லை
மும்பை ஆடுகளத்தின் தன்மையை அறியாமல் தேவையில்லாத ஷாட்களை விளாயாடி விக்கெட்டுகளை பஞ்சாப் அணியினர் வீணாகப் பறிகொடுத்தனர். அதிலும் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தது, தீபக் சஹரின் அற்புதமான பந்துவீச்சுக்கு சான்று. அந்த பந்து மயங்க் அகர்வாலை ஏமாற்றிச்சென்றது என்றுதான் கூற முடியும். இன்னும் அதிகமான ஃபுட் வொர்க் அகர்வாலுக்குத் தேவை.

சர்வதேச அளவில் ஜடேஜா சிறந்த பீல்டர். அவரிடம் பந்தை சென்றபோது, கே.எல்.ராகுல் தேவையில்லாமல் ரன் ஓடி ரன் அவுட் ஆகினார். பூரனுக்கு வந்தவுடனே ஷார்ட் பந்து போடப்பட்டதை அடித்து முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

தீபஹர் சஹர் “நக்குல்பால்”, “ஸ்லோ பா”ல் வீசுவதில் சிறந்தவர். சஹர் வீசிய நக்குல் பால் குறித்து அறியாமல் வேகமாக கெயில் பேட்டைக் கொண்டு சென்று ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டாப் ஆர்டர் சரிந்தது அனைத்துமே பேட்டிங்கில் நடந்த மோசான தவறுகள்தான். தவறுகளை செய்யும் வாய்ப்பை சிஎஸ்கே உருவாக்கி, விக்கெட்டுகளை லாவகமாகப் பறித்துக்கொண்டது.

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த மோசமான தோல்வியிலிருந்து விரைவாக மீண்டெழ வேண்டியது அவசியம்.

எளிய இலக்கு

107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணியின் கெய்க்வாட், டூப்பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கத்தி்லிருந்தே திணறிய கெய்க்வாட் 5 ரன்னில் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வந்த மொயின்அலி, டூப்பிளசிஸுடன் சேர்ந்தார். டூப்பிளசிஸ் நிதானமாக ஆட, மொயின் அலி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார், சிக்ஸரையும் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

மொயின் அலி அதிரடி

மொயின் அலி 31 பந்துகளி்ல் 41 ரன்கள் சேர்த்த நிலையில் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் பெரும்பாலும்,6-வது அல்லது 7-வது வீரராக களமிறங்கும் மொயின் அலி 3-வது வீராக களமிறங்கினாலும் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ரெய்னா 8 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ராயுடு வந்தவேகத்தில் ஷாட் அடிக்க பந்து எட்ஜில் பட்டு பூரனிடம் கேட்சானது. சாம்கரன், டூப்பிளசிஸ் இருவரும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.

சாம்கரன் 5 ரன்னிலும், டூப்பிளசிஸ் 36 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணி வென்றது. பஞ்சாப் தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விக்கெட் சரிவு

முன்னதாக பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தீபக் சஹரின் முதல் ஓவரின் 4-வது பந்தில் அகர்வால் க்ளீன் போல்டாகினார். சஹர் வீசிய 3-வது ஓவரில் கே.எல். ராகுல்(5) ஜடேஜாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். தீபர் சஹர் வீசிய 5-வது ஓவரில் கெயில்(10) ரன்னில் ஜடேஜாவால் அபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். அடுத்துவந்த பூரன் ஷார்ட் பந்தில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளேயில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது.

ஷாருக்கான் அபாரம்

கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா இந்த ஆட்டத்தில் 10 ரன்னில் சஹர் பந்துவீச்சில் வெளியேறினார். ஹை ரிச்சார்ட்ஸன், ஷாருக்கான் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. ஷாருக்கான் அவ்வப்போது பவுண்டரி,சிக்ஸரை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். ரிச்சார்ட்ஸன்(15),

அடுத்துவந்தமுருகன் அஸ்வி்ன்(6) ரன்னில் வெளியேறினனர். அரைசதத்தை நோக்கி நகர்ந்த ஷாருக்கான் 47 ரன்னில் சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷமி 9 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 106 ரன்கள் சேர்த்்தது. சிஎஸ்கே தரப்பில் சஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தவறவிடாதீர்!

Deepak ChaharChennai Super KingsPunjab KingsIndian Premier LeagueMoeen AliFaf du PlessisShahrukh Khanஐபிஎல் 2021சிஎஸ்கே வெற்றிபஞ்சாப் கிங்ஸ் தோல்விதோனிதீபக் சஹர்ஷாருக்கான்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x