Last Updated : 16 Apr, 2021 03:03 PM

 

Published : 16 Apr 2021 03:03 PM
Last Updated : 16 Apr 2021 03:03 PM

7-வது வீரராக களமிறங்கினால் தோனியால் சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியாது: கவுதம் கம்பீர் அறிவுரை

கவுதம் கம்பீர், எம்எஸ் தோனி | கோப்புப்படம்

மும்பை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 7-வது வீரராகக் களமிறங்கினால், அணியை வழிநடத்த முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.

14-வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் மோதியது. இதில் சிஎஸ்கே அணியில் 7-வது வீரராகக் களமிறங்கிய அணியின் கேப்டன் தோனி, ஆவேஷ் கான் பந்துவீச்சில் டக்அவுட்டில் வெளியேறினார்.

மும்பையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில அறிவுரைகளை தோனிக்கு வழங்கியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்சியில் கவுதம் கம்பீர் பேசியதாவது:

சிஎஸ்கே கேப்டன் தோனி, 7-வது இடத்தில் களமிறங்கி பேட் செய்தால் அணியை வழிநடத்துவது கடினம், வழிநடத்தவும் முடியாது. தோனி இன்னும் உயர்ந்த வரிசையில் அதாவது 4வது மற்றும் 5வது வரிசைக்குள்ளாகவே களமிறங்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு கேப்டனாக இருப்பவர், அணியை முன்நின்று வழிநடத்திச் செல்ல வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன், கேப்டனாக இருக்கும் வீரர் உயர்ந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்பதை பலமுறை கூறியுள்ளேன். தோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்யும்போது, அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்திருப்பார்கள், பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கும்போது எவ்வாறு வழிநடத்த முடியும்.

அதுமட்டுமல்லாமல் தோனி அதிரடியாக ஆட முயலக் கூடாது. இப்போது இருக்கும் தோனி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த தோனி கிடையாது. தோனியால் பந்தை சரியாகக் கணித்து ஆட முடியவில்லை. முதலி்ல் தோனி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, பந்துவீச்சாளர்களைக் கணித்தபின் விளையாட வேண்டும்.

ஆதலால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 7-வது வரிசையில் களமிறங்குவதற்கு பதிலாக, 5-வது வரிசைக்குள் களமிறங்குவது குறித்து பரிசீலனை செய்வார் என நம்புகிறேன்

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x