Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

சென்னை ஆடுகளத்தில் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாட முடியாது: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

சென்னை

சென்னை ஆடுகளத்தில் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாட முடியாது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி.

வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, "கொல்கத்தா அணி அற்புதமாக பேட் செய்து கொண்டிருந்த நிலையில் நாங்கள் போராடிய விதம் சிறப்பானது. வெவ்வேறு கட்டங்களில் பந்து வீச வந்த பந்துவீச்சாளர்கள் அனைவருமே அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினர்.

இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் அதிக அளவிலான நம்பிக்கையை எடுத்துச்செல்ல முடியும். பவர்பிளே முடிவடைந்ததும் ராகுல் சாஹர் விக்கெட் கைப்பற்றிய விதமும் இறுதியில் கிருணல் பாண்டியா செயல்பட்ட விதமும் முக்கியமானது.

சேப்பாக்கம் ஆடுகளம் நிச்சயமாக ரன் குவிக்க எளிதானதாக இல்லை. செட்டிலான பேட்ஸ்மேன் முடிந்தவரை நீண்ட நேரம் விளையாட வேண்டும்.

சென்னை ஆடுகளத்தின் தற்போதைய தன்மையானது மும்பை வான்கடே மைதானம் போன்று இல்லாமல் புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட முடியாது. நாங்கள் தொடங்கிய விதத்திற்கு சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். இது 2வது முறையாக நடந்துள்ளது. இதில் எப்படி முன்னேறுவது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.

இன்றைய ஆட்டம்: ராஜஸ்தான் - டெல்லி

இடம்: மும்பை

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x