Last Updated : 15 Apr, 2021 03:09 AM

 

Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

விளையாட்டாய் சில கதைகள்: வில்லனாக மாறிய ஹீரோ

இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் நாயகனாக இருந்து பின்னர் திடீரென வில்லனாக மாறிப்போன மனோஜ் பிரபாகரின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 15).

ஆரம்ப காலகட்டத்தில் பந்துவீச்சாளராக இந்திய அணியில் பயணத்தைத் தொடங்கிய மனோஜ் பிரபாகர், பின்னர் மெல்ல மெல்ல பேட்டிங் வரிசையை ஆக்கிரமித்தார். ஒரு காலகட்டத்தில் கபில்தேவுடன் புதிய பந்தை பங்குபோடும் வேகப்பந்து வீச்சாளராகவும் மறுபுறம் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராகவும் மிளிரத் தொடங்கினார் மனோஜ் பிரபாகர். தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்துவீச்சாளராகவும் இருந்ததால் இந்திய ரசிகர்களும் அவரை தலையில் வைத்து தாங்கினர்.

39 டெஸ்ட் போட்டிகளில் 1,600 ரன்களைக் குவித்த மனோஜ் பிரபாகர் எடுத்த விக்கெட்களின் எண்ணிக்கை 96. இதேபோல் 130 ஒருநாள் போட்டிகளில் 1,858 ரன்களைக் குவித்தவர் 157 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் பல ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு வேகமாக ரன்களைக் குவிக்கவேண்டிய காலத்தில் சுயநலத்துடன் நிதானமாக பேட்டிங் செய்ததால், ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார்.

குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியாவின் வெற்றிக்கு 9 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட, மனோஜ் பிரபாகரும், நயன் மோங்கியாவும் சேர்ந்து 9 ஓவர்களில் அவுட் ஆகாமல் 19 ரன்களை எடுத்தார்கள். இதனால் ரசிகர்களின் கோபத்துக்கு இருவரும் ஆளானார்கள்.

இந்த சமயத்தில் அவர் மீது சூதாட்ட புகார் எழுந்தது. இதை சமாளிக்கும் வகையில் பிரபாகர் அளித்த பேட்டியில், தன்னை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டியது கபில்தேவ்தான் என்றார்.

ஆனால் அதை அவரால் சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. இந்த பழியை தாங்க முடியாமல் ஒரு பேட்டியில் கபில்தேவ் கதறி அழ, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வில்லனாகிப் போனார் மனோஜ் பிரபாகர். இந்திய கிரிக்கெட்டில் அவரது இமேஜ் மீண்டும் எழவே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x