ஐசிசி தரவரிசை: கோலியைக் கீழே இறக்கினார் பாகிஸ்தானின் பாபர் ஆஸம்

பாபர் ஆஸம், விராட் கோலி | கோப்புப்படம்
பாபர் ஆஸம், விராட் கோலி | கோப்புப்படம்
Updated on
2 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை முதலிடத்திலிருந்து கீழே இறக்கி, பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 4-வது பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜாஹீர் அப்பாஸ் (1987-88), ஜாவித் மியான்தத் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் 82 பந்துகளில் 94 ரன்களை பாபர் ஆஸம் சேர்த்தார். இதன் மூலம் 13 புள்ளிகள் பெற்று 865 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விராட் கோலியை விட 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று பாபர் ஆஸம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

19 வயதுக்கான கிரிக்கெட் போட்டியில் 2010 முதல் 2012-ம் ஆண்டுவரை நட்சத்திர வீரராக ஜொலித்த பாபர் ஆஸம் 2015-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கு அறிமுகமானார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தற்போது தொடரைத் தொடங்கும்போது பாபர் ஆஸம் 837 புள்ளிகளில் இருந்தார். தற்போது 865 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் பாபர் ஆஸம் தற்போது 6-வது இடத்திலும், டி20 போட்டிக்கான தரவரிசையில் 3-வது இடத்திலும் உள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பேட்ஸ்மேனான ஃபக்கர் ஜமான், 778 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன்கள் அடித்தையடுத்து, 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷீகான் அப்ரிடி 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் 96-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரோஸ் டெய்லர் 4-வது இடத்திலும் உள்ளனர். டாப் 10 வரிசையில் ரோஹித், கோலி தவிர வேறு எந்த இந்திய வீரர்களும் இல்லை.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் பும்ரா 690 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான், 3-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் மாட் ஹென்றி உள்ளனர்.

ஆல்ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in