Last Updated : 14 Apr, 2021 03:15 PM

 

Published : 14 Apr 2021 03:15 PM
Last Updated : 14 Apr 2021 03:15 PM

டெல்லி கேபிடல்ஸ் அணிக்குப் பின்னடைவு: முக்கிய வேகப்பந்துவீச்சாளருக்கு கரோனா தொற்று

கோப்புப்படம்

புதுடெல்லி

ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான ஆன்ரிச் நார்ட்ஜே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபாடாவும், ஆன்ரிச் நார்ட்ஜேவும் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடருக்காக வந்தனர்.

இதில் இந்தியாவுக்கு வரும்போது, ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு கரோனா தொற்று இல்லை என்றுதான் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டுதலின்படி, ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொண்டு 3 முறை கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்த பின்பே அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிசிசிஐ நிலையான வழிகாட்டுதலின்படி ஒரு வீரர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 5 முறை கரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் 9 மற்றும் 10-வது நாளில் தொடர்ந்து நெகட்டிவ் வரவேண்டும். அதன்பின்புதான் அணிக்குள் சேர்க்கப்படுவார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஏற்கெனவே ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாகத் தொடரிலிருந்தே விலகியுள்ளார். இப்போது ஆன்ரிச் இல்லாதது டெல்லி அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.

நாளை மும்பையில் நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x