Last Updated : 14 Apr, 2021 03:13 AM

 

Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: சங்கிலி குண்டு எறிதலின் வரலாறு

குண்டு எறியும் போட்டி, ஈட்டி எறியும் போட்டி ஆகியவற்றைப் போலவே, வீரர்களின் சக்தியை நிரூபிக்கும் போட்டிகளில் ஒன்றாக சங்கிலி குண்டு எறியும் போட்டியும் உள்ளது.

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கிமு 2000-ம் ஆண்டு முதலே சங்கிலி குண்டு எறியும் போட்டிகள் இருந்துள்ளன. ஆனால் இப்போது இருப்பதுபோல் சங்கிலியின் முனையில் இரும்பு குண்டுகளை இணைத்து போட்டிகளில் எறியவில்லை. அதற்கு மாறாக தேர்ச்சக்கரங்களை, அவற்றின் அச்சைப் பிடித்து எறிந்து வீரர்கள் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இதிகாச கதாபாத்திரங்கள் பலரும் இப்போட்டியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

பிற்காலத்தில் தேர்ச்சக்கரங்களுக்கு பதிலாக கற்பாறைகளை எறிந்து வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் இப்போட்டி நடந்துள்ளது. காலம் மாற மாற கற்பாறைகளுக்கு பதிலாக இரும்புக் குண்டை சங்கிலியில் இணைத்து, அதை வீசும் முறை அமலுக்கு வந்தது. 1900-ம் ஆண்டுமுதல் ஒலிம்பிக் போட்டியில் இவ்விளையாட்டு இடம்பெற்று வருகிறது.

இப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டு 7.26 கிலோ எடை கொண்டதாகவும், பெண்கள் பிரிவில் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டு 4 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கிலி, 1.22 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது விதி. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் 7 அடி விட்டமுள்ள வட்டத்துக்குள் இருந்துகொண்டு, அதன் கோட்டைத் தாண்டாமல் சங்கிலி குண்டை எறிய வேண்டும். இதில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்புகள் வழங்கப்படும்.

1900, 1904 மற்றும் 1908-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரரான ஜான் பிளானகன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் அமெரிக்கர்களே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x