

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பய ணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஹோபர்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அனுபவம் இல்லாத மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சரண்டர் ஆனது.
அதேவேளையில் கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, டேரரன் சமி, ஆந்த்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக் கான போட்டிகளில் பங்கேற்காமல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறும்போது, பிக் பாஷ் தொடரில் ரஸல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவதையும், பிராவோ, கிறிஸ் கெய்ல் சிக்ஸர்கள் விளாசுவதையும் பார்க்க ஸ்வாரஷ்யமாக உள்ளது. அதேவேளையில் நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும்போது அவர்கள் இல்லாதது வெறுப்பாக உள்ளது.
இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தான் சரிசெய்ய வேண்டும். இதேபோன்ற நிலை நியூஸிலாந்து அணியிலும் இருந்தது. ஆனால் அந்த அணி வீரர்கள் எல்லோரும் தேசிய அணிக்காக ஆடினார்கள். எனவே நிர்வாகமும், உயர் பதவியில் இருப்பவர்களும் தீர்வை காணவேண்டும். இதுதான் முன்னணி வீரர்களை களத்திற்கு கொண்டுவருவதற்கு சிறந்த வழி.
காலம் மாறிக்கொண்டே வருகிறது. பழைய விஷயங்களை பற்றியே பேசுகிறோம். இதுதான் வீழ்ச்சிக்கு காரணம். இதை தவிர்த்து எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் கிரிக்கெட் நிலைமையை பார்க்கும் போது மனது வலிக்கிறது. வீரர்கள், வாரிய உறுப்பினர்கள், நிர்வாக பணியாளர்கள் ஆகியோருக்கு இடையேயான உறவு வலிமையானதாக இருக்க வேண்டும். மேலும் வாரியம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.