Published : 13 Apr 2021 01:13 PM
Last Updated : 13 Apr 2021 01:13 PM

எங்களுக்கு ஹார்ட் அட்டாக் தருவதை நிறுத்தவேமாட்டார்கள்: பஞ்சாப் கிங்ஸ் அணியைப் புகழ்ந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா

பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

எங்களுக்கு ஹார்ட் அட்டாக் தருவதை நிறுத்தவே மாட்டார்கள் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் பெற்ற வெற்றியை, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பெருமையுடன் குறிப்பிட்டார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

222 ரன்களைத் துரத்திப் புறப்பட்ட ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் பஞ்சாப் வீரர்களுக்கு கிலி ஏற்படுத்தினார். வெற்றி கிடைத்துவிடுமா என்று கடைசிப் பந்துவரை பஞ்சாப் அணி வீரர்களின் மனதை ஊசலாட்டத்திலேயே சாம்ஸன் வைத்திருந்தார்.

கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஸ்தீப் சிங் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று சாம்ஸன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தேஜாவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆட்டம் உணர்த்தியது. கடந்த ஐபிஎல் சீசனிலும் இதேபோன்று இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால், அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றது.

அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் மும்பை அணியுடன் கடுமையாகப் போராடிய பஞ்சாப் அணி இரு சூப்பர் ஓவர்களைச் சந்தித்து வெற்றியைப் போராடிப் பறித்தது. இதுபோன்ற பல போட்டிகளை கடைசி நேரத்தில் போராடி பஞ்சாப் அணி வென்றுள்ளது.

தன்னுடைய அணியின் வெற்றியைப் பாராட்டிய உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனக்கே உரிய ஸ்டைலில் புகழ்ந்துள்ளார். நடிகை ப்ரீத்தி ஜிந்தா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஆஹா, என்ன மாதிரியான ஆட்டம். புதிய ஜெர்ஸியில் எங்களுக்கு இது புதிய ஆட்டம்.

போட்டியைப் பார்க்கும் எங்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார்கள். என்ன செய்வது? எங்களுக்கு இது சரியான போட்டியாக இல்லாவிட்டாலும், முடிவு எங்களுக்கானதாக இருந்தது. வாவ்... கே.எல்.ராகுல், தீபக் ஹூடா உள்ளிட் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் இரு முறை மட்டுமே நாக்அவுட் சுற்றுக்கு பஞ்சாப் அணி சென்றுள்ளது. ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. 2014-ம் ஆண்டில் மட்டும் 2-ம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x