எனக்குப் பேச வார்தைகள் இல்லை; இதற்கு மேல் அதிகமாக ஏதும் செய்ய முடியாது: தோல்விக்குப் பின் சாம்ஸன் வருத்தம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன்: படம் உதவி | ட்விட்டர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன்: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

எனக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. இதற்கு மேல் வேறு யாரும் ஏதும் செய்துவிட முடியாது என நினைக்கிறேன் என்று தோல்விக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்துப் போராடி 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து நின்று, கடைசி வரை போராடி 5 ரன்களை சாம்ஸன் எடுக்கமுடியாமல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியுற்றது போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்குப் பெரும் கவலையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சாம்ஸனைப் புகழ்ந்து வருகின்றனர். கடைசிப் பந்துவரை களமாடிய சாம்ஸன் 63 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்ளிட்ட 119 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபின் சஞ்சு சாம்ஸன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்தப் போட்டியில் 2-வது பகுதியில் என்னுடைய இன்னிங்ஸ்தான் நான் விளையாடியதிலேயே சிறந்ததாகக் கருதுகிறேன். முதல் பாதி இன்னிங்ஸில் என்னால் சரியான அளவில் பந்துகளை அடிக்க டைமிங் கிடைக்கவில்லை. அதற்காக அதிகமான நேரம் எடுத்துக்கொண்டேன், பந்துவீச்சாளர்களின் சரியான பந்துகளுக்கு மதிப்பளித்து ஒரு ரன், 2 ரன்களாக எடுத்தேன்.

எனக்கு சரியான நேரம் கிடைத்தவுடன் என்னுடைய வழக்கமான ஷாட்களை 2-வது பாதியில் ஆடத் தொடங்கினேன். என்னுடைய வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பிய பின் மிகவும் ரசித்துதான் பேட்டிங் செய்தேன், ஷாட்களை ஆடினேன். என்னுடைய திறமை மீது கவனம் செலுத்தும் போது இயல்பாக அது நடந்துவிடுகிறது. பந்தைப் பார்த்தவுடன் அடிக்கத் தோன்றுகிறது.

சில நேரங்களில் அவசரப்பட்டு ஷாட்களை ஆடி ஆட்டமிழந்திருக்கிறேன். ஆனால், இயல்பான ஆட்டத்திலிருந்து மாறவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை. மிகவும் நெருக்கடியான ஆட்டமாக அமைந்தது. ஆனால், எனக்கு துரதிர்ஷ்டமாக அமைந்தது. இதற்கு மேல் என்னால் ஏதும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை''.

இவ்வாறு சாம்ஸன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in