Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

அபாயகரமான பேட்டிங் குழு எங்களிடம் உள்ளது: கொல்கத்தா கேப்டன் மோர்கன் பெருமிதம்

ஐபிஎல் தொடரில் அபாயகரமான பேட்டிங் குழு தங்களிடம் உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இது கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் தொடரில் 100வது வெற்றியாக அமைந்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் விளாசியது.

188 ரன்கள் இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவையாக இருந்தது. பாட் கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில் அப்துல் சமத் 2 சிக்ஸர்களை பறக்கவிட 16 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆந்த்ர ரஸ்ஸல் அற்புதமாக வீச ஹைதராபாத் அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறும்போது, “எங்கள் அணியின்பலங்களில் ஒன்று திறமையான இரு இளம் வீரர்களை தொடக்க வீரர்களாக கொண்டுள்ளதுதான். ராகுல் திரிபாதி 3வது வீரராககளமிறங்கி அழகாக விளையாடினார். நடுவரிசையில் நாங்கள் பல துறையிலும் சிறப்பு வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளோம். தினேஷ் கார்த்திக் இதுபோன்று விளையாடும் போதோ அல்லது ஆந்த்ரே ரஸ்ஸல் தனது ஆட்டத்தை விளையாடும் போதோ போட்டிகளில் வெல்லும் திறன் கொண்ட மிகவும் அபாயகரமான பேட்டிங் பிரிவை பார்ப்பீர்கள்.

வெற்றியை தேடிக்கொடுக்கக்கூடிய வகையில் விளையாடிய நித்திஷ் ராணாவின் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது அணுகுமுறை என்னை கவர்ந்தது. ராணா ஆக்ரோஷமாக விளையாடினார். எப்போதும் அவர் நேர்மறையான விஷயங்களை தேர்வுசெய்வார். இது எங்களது பேட்டிங்கை கட்டமைத்தது. ஆந்த்ரே ரஸ்ஸலின் செயல்திறனாலும் மகிழ்ச்சியடைகிறேன். அவர், நீண்ட காலமாகவே அணியின் பெரிய அங்கமாக இருந்துவருகிறார்.

இறுதிக்கட்ட ஓவரை வீசுவது எளிதான பணி இல்லை, அவர் சமாளித்து வெற்றியை தேடித்தந்தார்” என்றார்.

இன்றைய ஆட்டம்கொல்கத்தா - மும்பை

இடம்: சென்னை

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x