

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று ஐபிஎல் தொடரில் 100-வது வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.
சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், வெற்றிக்கு அருகே வரை சென்றதால், ஓரளவுக்கு ரன் ரேட்டைத் தக்கவைத்துக் கொண்டது. இந்த ரன் ரேட் தக்கவைப்புதான் கடைசி நேரத்தில் கைகொடுக்கும் என இப்போது இருந்தே சன்ரைசர்ஸ் தயாராகிவிட்டது.
இந்தப் போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:
100-வது வெற்றி
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பெற்ற வெற்றி, ஐபிஎல் டி20 தொடரில் பெற்ற 100-வது வெற்றியாகும். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 120 வெற்றிகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 106 வெற்றிகளையும் பெற்றுள்ளது. அந்த வரிசையில் 3-வது இடத்தை கொல்கத்தா அணி பிடித்தது.
சாதனை வெற்றி
ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா அணி பெற்ற வெற்றி அந்த அணிக்கு 12-வது வெற்றியாகும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணி எனும் பெருமையையும் கொல்கத்தா அணி பெற்றது.
2-வது வீரர் ராணா
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அதிகமான ரன்கள் குவித்த 2-வது வீரர் எனும் பெருமையை கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா (80) பெற்றார். இதற்கு முன் 2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கவுதம் கம்பீர் 90 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நிதிஷ் ராணா நேற்று அரை சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 1,500 ரன்களை நிறைவு செய்தார்.
ராகுல் திரிபாதி மைல்கல்
கொல்கத்தா அணி வீரர் ராகுல் திரிபாதி நேற்று 28 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் ஆயிரம் ரன்களை திரிபாதி எட்டினார்.
அதிகபட்ச ஸ்கோர்
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா அணி சேர்த்த 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அந்த அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2019-ல் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை கொல்கத்தா அணி சேர்த்திருந்தது.
3 டக், மூன்று 80 ரன்கள்
கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணா கடந்த 6 இன்னிங்ஸ்களில் ஒரு டக் மற்றும் 80 ரன்களுக்கு மேல் எனத் தொடர்ந்து 3 முறை அடித்துள்ளார். இதில் 3 டக் அவுட்கள், 3 முறை 80 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.