Last Updated : 12 Apr, 2021 06:42 AM

 

Published : 12 Apr 2021 06:42 AM
Last Updated : 12 Apr 2021 06:42 AM

ராணா, திரிபாதி காட்டடி: கொடி நாட்டிய கொல்கத்தாவுக்கு 100-வது வெற்றி: சன்ரைசர்ஸ் போராட்டம் தோல்வி


ராணா, திரிபாதியின் காட்டடி ஆட்டம், பிரசித் கிருஷ்ணாவி்ன் முக்கிய விக்ெகட்டுகள் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியி்ன் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்க்ததா நைட்ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்களி்ல் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது 100-வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை சிஎஸ்கே, மும்பை அணிகள் மட்டுமே 100 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் கொல்கத்தாவும் இணைந்தது.

சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், வெற்றிக்கு அருகே வரை சென்றதால், ஓரளவுக்கு ரன்ரேட்டை தக்கவைத்துக் கொண்டது. இந்த ரன்ரேட் தக்கவைப்புதான் கடைசி நேரத்தில் கைகொடுக்கும் எனஇப்போது இருந்தே சன்ரைசர்ஸ் தயாராகிவிட்டது.

கொல்கத்தாவின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி ஆகியோரின் ஆட்டம் முக்கியக் காரணம். அடித்தால் 80 ரன்கள் அடிப்பேன், இல்லாவிட்டால் டக்அவுட் ஆவேன் என்ற ரீதியில்தான் ராணாவின் பேட்டிங் அமைந்துள்ளது. கடைசியாக ராணா விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 0,81,0,87,0,80 என ஸ்கோர் செய்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுவந்த ராணா, சிறந்த பங்களிப்பை அளித்தார். 56 பந்துகளில் 80 ரன்கள்(4சிஸ்கர், 9 பவுண்டரி) சேர்த்த ராணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

உறுதுணையாக ஆடிய ராகுல் திரிபாதி 29 பந்துகளில் 52 ரன்கள்(2சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுககு 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின் கொல்கத்தா அணியின் பேட்டிங்கும் ஆட்டம் கண்டது.

15 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று வலுவடன் கொல்கத்தா இருந்ததால், 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோர்கன், ரஸல் இருவரும் சொதப்பிவிட்டனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.

சென்னை சேப்பாக்கம் போன்ற மெதுவான ஆடுகளத்தில் சராசரியாக 165 ரன்கள் அடிப்பதே பெரியவிஷயம். ஆனால், அந்த ஆடுகளத்தில் 187 ரன்கள் அடித்த கொல்கத்தா அணிக்கு பாராட்டுக்கள்.
சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தலைகீழாக இருந்தது. சுழற்பந்துவீச்சாளர்களை இரு அணியினரும் அடித்து நொறுக்கினர். மாறாக வேகப்பந்துவீச்சு ஓரளவுக்கு கைகொடுத்தது.

பிரசித் கிருஷ்ணா தொடக்கத்திலேயே வார்னரை வெளியேற்றியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு, அடுத்த ஓவரில் சகிப் அல்ஹசன் தனது பந்துவீச்சில் விருதிமான் சஹாவை ஆட்டமிழக்கச்செய்து சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

கம்மின்ஸ், ரஸல் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அதிலும் தொடக்கத்தில் ரஸல் பந்துவீச்சு அடிக்கப்பட்டாலும், கடைசி இரு ஓவர்களையும் ரஸல் கட்டுக்கோப்பாக வீசினார். ஹர்பஜன் நேற்று முதல் ஓவர் மட்டும் வீசினார் ஆனால் அதன்பின் ஏன் ஓவர் வழங்கவில்லை எனத் தெரியவில்லை.699 நாட்களுக்குப்பின் களமிறங்கிய ஹர்பஜனுக்கு கூடுதலாக ஓவர்களை வழங்கியிருக்கலாம்.
மொத்தத்தில் கொல்கத்தா அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை, பெரியஅளவில் பவர் ஹிட்டர்ஸ், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் வல்லமை கொண்ட பெரிய பேட்ஸ்மேன்கள் இல்லாதது குறையாகும். இந்த ஆட்டத்தில் முகமது நபியை களமிறக்கியதற்கு பதிலாக ஜேஸன் ஹோல்டரை களமிறக்கி இருந்தால், கடைசி நேரத்தில் பல திருப்பங்கள் நடந்திருக்கும். கடந்த சீசனில் பல ஆட்டங்களை ஹோல்டர் வெல்ல கடைசி நேரத்தில் காரணமாக இருந்தார்.

மணிஷ் பாண்டே களத்தில் இருந்தாலும் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின், அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. சில பெரிய ஷாட்களை அடித்திருந்தால் நெருக்கடியைக் குறைத்திருக்கலாம்.

பேர்ஸ்டோ தனக்கு உரிய பணியைச் சிறப்பாகச் செய்தார். பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே இருவரும்தான் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை 12-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் எட்டியது. ஆனால் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் 38 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அப்துல் சமத் களமிறங்கி கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 சி்க்ஸர்களை விளாசி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார். ஆனால், கடைசி ஓவரில் 22 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால் அனுபவ வீரரான ரஸல் வீசிய கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வீரர்களால் இலக்கை நெருங்க முடியவில்லை.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, விஜய் சிங்கர், நடராஜன் ஆகியோர் நேற்று எதிர்பார்த்த அளவுக் பந்துவீசவில்லை. கொல்கத்தா அணி்க்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த ஆடுகளம் ஏன் சன்ரைசர்ஸ் அணியால் பயன்படுத்த முடியவி்ல்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல் ரஷித் கான் வழக்கம்போல் கட்டுக்கோப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

188 ரன்கள் சேர்த்தால வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர் 3 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் தினேஷ்கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சஹிப் அல்ஹசன் தனது முதல் ஓவரை வீச வந்து முதல்பந்தில் சாஹாவை வெளியேற்றினார். விருதிமான் சாஹா 7 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகி ஆட்டமிழந்தார். 10 ரன்களுக்கு 2 விக்கெட் என சன்ரைசர்ஸ் தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, பேர்ஸ்டோ கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மிரட்டலான ஃபார்மில் இருந்து வரும் பேர்ஸ்டோ கொல்கத்தா வீரர்களை விட்டு வைக்கவில்லை. அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோ 40 பந்துகளில் 55 ரன்னில்(3சிக்ஸர், 5பவுண்டரி) கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த முகமது நபி 14, விஜய் சங்கர் 11 என ஏமாற்றம் அளிக்க அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. மணிஷ் பாண்டே 37 பந்துகளில் அரைசதம் கண்டார். பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின் மணிஷ் பாண்டே அடித்து ஆடியிருக்க வேண்டும் ஆனால், எந்த ஷாட்டும் அவருக்கு பலன் அளிக்கவி்ல்லை.

6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்துல் சமத் கடைசி நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது.கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 அபாரமான சிக்ஸர்களை விளாசி திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அனுபவ வீரர் ஆன்ட்ரூ ரஸல் அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசி மணிஷ் பாண்டே, சமத் இருவரையும் குழப்பி, ரன் எடுக்கவிடாமல் தடுத்தார். ரஸலின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை மீறி பாண்டே, சமதால் அடிக்க முடியவில்லை.

மணிஷ்பாண்டே 61 , சமது 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்னில் சன்ரைசர்ஸ் தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கில், ராணா களமிறங்கினர். கில் தொடக்கத்திலிருந்தே சில மோசமான ஷாட்களை ஆடினார், எதிர்பாரத்தது போன்று பந்தும் அவருக்கு சி்க்கவில்லை. ஆனால் தொடக்கத்திலிருந்து ராணா அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது.

ரஷித் கான் பந்துவீச்சில் திணறிய கில் போல்டாகி 15ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ராகுல் திரிபாதி களமிறங்கி ராணுவுடன் சேர்ந்தார்.

இருவரும் ஜோடி சேர்ந்தபின் கொல்கத்தாவின் ஸ்கோர் எகிறத்த தொடங்கியது, ராணா பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். 11.3 ஓவர்களில் கொலக்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. மறுபுறம் காட்டடி அடித்து வந்தராகுல் திரிபாதி 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ராகுல் திரிபாதி 53 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். ஆனால், அதன்பின் வந்த ரஸல்(5) மோர்கன்(2) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். ராணா 80ரன்னில் முகமது நபி பந்துவீச்சில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று வலுவாக இருந்தது கொல்கத்தா. ஆனால், அடுத்த 14 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 வி்க்கெட்டுகளை இழந்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x