Last Updated : 12 Apr, 2021 03:18 AM

 

Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்தியா துரத்திய இமாலய இலக்கு

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4-வதாக பேட்டிங் செய்யும் அணிகள் 250 ரன்களை எட்டுவதே பெரிய விஷயமாக உள்ளது. இதனாலேயே டாஸில் வெற்றி பெறும் அணிகள் பெரும்பாலும் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்கும். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் 4-வதாக பேட்டிங் செய்து, 406 ரன்களைத் துரத்திப் பிடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1976-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி இச்சாதனையைப் படைத்தது.

இந்திய அணிக்கு கவாஸ்கர் வந்து சேர்ந்த காலம் அது. அவருக்கு துணையாக அப்போது குண்டப்பா விஸ்வநாத்தும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற, இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்தச் சூழலில் 3-வது டெஸ்ட் போட்டி குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 359 ரன்களையும், இந்தியா 228 ரன்களையும் சேர்த்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, காளிசரணின் சதத்தின் உதவியால் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது. இந்திய அணி வெற்றிபெற வேண்டுமானால் 406 ரன்களை எடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்காக 256 ரன்களே இருந்தன.

முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் சுருண்ட இந்தியாவை, 2-வது இன்னிங்ஸில் மேலும் குறைந்த ரன்களில் சுருட்டலாம் என்று மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக விஸ்வரூபம் எடுத்து நின்றது இந்திய பேட்டிங் வரிசை. கவாஸ்கர் 102 ரன்களையும், விஸ்வநாத் 112 ரன்களையும் குவிக்க 4 விக்கெட் இழப்புக்கு 406 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது இந்தியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x