

விராட் கோலி சில குறிப்பிட்ட ஷாட்களில் பலவீனமாக இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸத்தின் பேட்டிங்கை பின்பற்றினால், விராட் கோலி இன்னும் சிறந்த பேட்ஸமேனாக மாற முடியும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்யுப் ஜாவித் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பாகிஸ்தான் இணையதளத்துக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்யுப் ஜாவித் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாபர் ஆஸம், விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டால், பாபர் ஆஸம்தான், கோலியை விட சிறந்த ஷாட்களை ஆடக்கூடியவர். ஸ்விங் பந்துகளை விளையாடுவதில் பாபர் ஆஸத்தைவிட பின்தங்கியே கோலி இருக்கிறார்.
இரு பேட்ஸ்மேன்களுக்குமே நான் அறிவுரை வழங்குகிறேன். விராட் கோலி எவ்வாறு உடற்தகுதியை பராமரிக்கிறாரோ அதை பாபர் ஆஸம் பின்பற்றி உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்.
அதேநேரம், ஆஃப் சைடில் செல்லும் பந்தை எவ்வாறு விளையாடுவது என்பதை பாபர் ஆஸ்திடம் கேட்டு விராட் கோலி கற்க வேண்டும். பாபர் ஆஸத்தைவிட சிறந்த ஷாட்களை கோலி ஆடக்கூடியவர்தான்.
ஆனால், ஒரு விஷயத்தில் பலவீனமாக இருக்கிறார். ஆஃப் ஸ்டெம்ப் திசையில் விலகிs செல்லும் பந்தை விளையாடும்போது, பலமுறை கோலி ஆட்டமிழந்துள்ளார். குறிப்பாக ஆன்டர்ஸன் பந்துவீச்சில் கோலி பலமுறை விக்கெட்டை இழந்துள்ளார்.
ஆனால், நீங்கள் பாபர் ஆஸத்தின் பேட்டிங்கைப் பார்த்தால், எந்த பலவீனத்தையும் கண்டறிய முடியாது. அதாவது சச்சின் டெண்டுல்கர் போல் விளையாடுவார். சச்சினிடமும் பேட்டிங்கில் எந்த பலவீனத்தையும் கண்டறிய முடியாது. பாபர் ஆஸம் பேட்டிங் தொழில்நுட்பத்தில் கோலியை விட வலுவாக இருக்கிறார்.
கோலியின் உடற்தகுதி பராமரிப்பை பாபர் பின்பற்ற வேண்டும். அதேபோல, ஆஃப் சைடில் எவ்வாறு விளையாடுவது என்பதை பாபர் ஆஸத்திடம் இருந்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த அளவுக்கு நிலைத்தன்மையுடன் பாபர் ஆஸம் பேட் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. பாபர் ஆஸம் தனி நபராக இருந்து அணியில் வீரர்களின் பேட்டிங்கை வளர்த்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் விராட் கோலியையும் முறியடித்துவி்ட்டார் பாபர் ஆஸம்.
பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில் பாபர் ஆஸம் வந்தார், உண்மையில் பாகிஸ்தான் அணிக்கு மிக்பெரிய அதிர்ஷ்டம். அணியை சரியாக வழிநடத்தி, தன்னுடைய ஃபார்ம் குறையாமல் பாபர் ஆஸம் பார்த்துக்கொண்டார்
இவ்வாறு ஜாவித் தெரிவித்தார்.
தற்போது ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் பாபர் ஆஸத்தைவிட கோலிதான் முதலிடத்தில் உள்ளார்.