Last Updated : 10 Apr, 2021 06:31 PM

 

Published : 10 Apr 2021 06:31 PM
Last Updated : 10 Apr 2021 06:31 PM

சிஎஸ்கே அணி தோற்கலாம்; டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறலாம்: 3 காரணங்கள், புள்ளிவிவரங்கள் என்ன?

ரிஷப் பந்த், தோனி: கோப்புப் படம்.

மும்பை

மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி.

ஐபிஎல் தொடரில் நிலையான வெற்றிகளைக் கொடுத்துவரும் அணி என்றால் அது சிஎஸ்கே அணி மட்டும்தான். இதில் கடந்த ஆண்டு சீசன் மட்டும்தான் விதிவிலக்கு. இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி சென்றுள்ளது. கடந்த முறை மட்டும்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்குச் சென்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றது.

எத்தனை வெற்றிகள்

வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜாம்பவான் தோனியை எதிர்கொள்கிறார் ரிஷப் பந்த். குருவிடமே கற்றுக்கொண்ட வித்தையைப் பரிசோதிக்கிறார் ரிஷப் பந்த் என்பது சுவாரஸ்யம். இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 23 முறை மோதியுள்ளன. அதில் சிஎஸ்கே அணி 15 முறை வென்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 8 முறை வென்றுள்ளது.

அதிகமான ரன்கள்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக தோனி 547 ரன்களும், அடுத்ததாக ரெய்னா 498 ரன்களும் குவித்துள்ளனர். சிஎஸ்கேவுக்கு எதிராக ஷிகர் தவண் 302 ரன்கள் குவித்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக அஸ்வின் அதிகபட்சமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே தரப்பில் பிராவோ 14 விக்கெட்டுகளையும், ஜடேஜா 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை 2 லீக் ஆட்டங்களிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் பிரித்வி ஷா 64 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஆனால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 44 ரன்களில் தோற்றது. 2-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. ஆனால், டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் சதம் அடித்து 101 ரன்களுடன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார். ஆதலால், இன்றைய ஆட்டமும் பரபரப்புடன் இருக்கும்.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் என்ன?

மிரட்டலான ஃபார்ம்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் ஷிகர் தவண் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதேபோல விஜய் ஹசாரே கோப்பையில் 850 ரன்கள் குவித்து பிரித்வி ஷாவும் காட்டுத்தனமான ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்ற அஸ்வின், இங்கிலாந்து தொடரில் விளாசிய ரிஷப் பந்த் என ஃபார்மில் இருக்கின்றனர்.

இதை ஃபார்முடன் விளையாடினால் நிச்சயம் சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியும். இது தவிர்த்து அக்ஸர் படேல், ஸ்டாய்னிஷ், ஸ்மித் என பெரிய படையே இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணியில் பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள், சர்வதேச அனுபவமே இல்லாதவர்கள்.

வலிமையான வீரர்கள் கொண்ட அணி

டெல்லி அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரோயாஸ் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக ஸ்மித் களமிறங்கக்கூடும். தேவைப்பட்டால் அஜின்கயே ரஹானேவும் சேர்க்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் ரபாடா, நார்ஜே, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷிம்ரன் ஹெட்மெயர் என பேட்டிங்கில் வலிமையான படை இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், டாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின் என ஆல்ரவுண்டர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சர்வதேசப் போட்டிகளில் சமீபத்தில் வரை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.

பெரும்பாலான சிஎஸ்கே வீரர்களுக்குப் பயிற்சி இல்லை

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் கடந்த ஆண்டு ஓய்வுபெற்று சர்வதேச அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள். உள்ளூர் போட்டிகளிலும் இருவரும் விளையாடவில்லை. அம்பதி ராயுடு, ஜடேஜா ஆகியோரும் பல்வேறு காரணங்களால் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. டூப்பிளசிஸ், இம்ரான் தாஹிர், டுவைன் பிராவோ ஆகியோர் வயதாகிவிட்டதால், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஃபார்மில் இல்லை. சமீபத்தில் தங்கள் நாட்டு அணிக்குக் கூட விளையாடவில்லை.

உத்தப்பா, ஷர்துல் தாக்கூர், சாம் கரன் உள்ளிட்ட ஃபார்மில் இருக்கும் வீரர்கள் மீது தான் அழுத்தம் இருக்கும். இதனால்தான டெல்லி கேபிடல்ஸ் அணி வெல்ல வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x