

டிவில்லியர்ஸ் முதல் போட்டியிலேயே விளையாடுவதைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயந்துவிட்டார்கள். எங்களின் ஆழ்ந்த பேட்டிங் வரிசை இருந்தது என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பெருமித்ததோடு தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
ஹர்சல் படேலை டெல்லி அணியிடம் இருந்து வாங்கினோம். ஹர்சல் படேல் அவரின் பொறுப்பை உணர்ந்து திட்டமிட்டு விளையாடினார், நல்ல வித்தியாசத்தை பந்துவீச்சில் வெளிப்படுத்தினார். எங்களின் டெத்பவுலாராக ஹர்சல் படேல் உருவாகிவிட்டார். வீரர்கள் தெளிவான நிலைப்பாட்டுடன் பந்துவீச வேண்டும், பேட்டிங் செய்ய வேண்டும் என்பது கேப்டன் விரும்புவார்கள்.
டிபி டிவில்லியர்ஸ் பேட்டிங்கைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியினர் இன்னும் பயப்படுகிறார்கள். அவர் பேட்டிங் செய்ய வந்ததில் இருந்தே அனைவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. எங்கள் அணியில் ஆழ்ந்த பேட்டிங் வரிசைஇருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். எந்த ஆடுகளமாக இருந்தாலும் அடித்து நொறுக்கக்கூடிய ஒரே பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ்தான்.
சேப்பாக்கம் ஆடுகளம் முதல்பாதியில் நன்றாக இருந்தது. பனிப்பொழிவு இருந்தால் எங்களுக்கு உதவும் என்று எண்ணினோம். ஆனால், இல்லை. ஆதலால், விக்கெட்டை நிலைப்படுத்த விரும்பினோம்.
2-வது பாதியில் ஆடுகளத்தில் பந்து மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வந்தது. இதனால் அடித்து ஆடுவதில் சிக்கல் இருந்தது. இதனால்தான் ஒவ்வொரு பார்ட்டனர்ஷிப்பும் முக்கியமாக இருந்தது. கடைசி 6 ஓவர்களை நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஹர்சல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்
இவ்வாறு கோலி தெரிவித்தார்.