

14வது ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக அந்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ேஜஸன் பெஹரன்டார்ஃப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான பெஹரன்டார்ஃப் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 10 ஒருநாள் போட்டிகல், 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே சாம்கரன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருக்கும் நிலையில் கூடுதலாக பெஹரன்டார்ஃப் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2-வது முறையாக பெஹரன்டார்ஃப் இணைகிறார். இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருந்த பெஹரன்டார்ஃப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பந்தில் பந்துவீசுவதற்கு பெஹரன்டார்ஃப் சிறந்த வீரர். பந்தை நன்றாக ஸ்விங் செய்தல், பவுன்ஸர் வீசுவதில் பெஹரன்டார்ஃப் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்.
முன்னதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், தனிமைப்படுத்தும் காலம், கரோனா வைரஸ் பரவல் மற்றும் எதிர்வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர், டி20 உலகக்கோப்பை ஆகியவற்றுக்காக போதுமான ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல் தொடரில் திடீரென விலகுவதாக அறிவித்தார். கடந்த சீசனில் ஹேசல்வுட் சிஎஸ்கே அணியில் 3 ஆட்டங்களில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மும்பையில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.