

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
எர்னஸ்ட் குல்பிஸ் என்ற லாட்வியா வீரரை 6-3, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் நோவக் ஜோகோவிச்
எர்னஸ்ட் குல்பிஸ் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகோவிச் கொடுத்த நெருக்கடியில் 44 முறை தவறான ஆட்டத்தை ஆடினார் குல்பிஸ்.
முதல் செட்டில் ஜோகோவிச்தான் பிரச்சனையில் சிக்கினார். பிறகு இரண்டு பிரேக் பாயிண்ட்களை தற்காத்து 2-2 என்று சமன் செய்தார்.
சில நிமிடங்கள் கழித்து ஜோகோவிச் 3 முயற்சிகளில் முதல் பிரேக் பாயிண்ட் பெற்றார். குல்பிஸ் அடித்த ஃபோர்ஹேண்ட் ஷாட் அவுட் ஆனது.
அதிலிருந்து ஜோகோவிச் ஆதிக்கம் தொடங்கியது. குல்பிஸ் தன் பங்கிற்கு சர்வில் 5 முறை டபுள் ஃபால்ட் செய்தார். முதல் இரண்டு செட்களை இவ்வாறு இழந்த குல்பிஸ் 3வது செட்டில் தன் ஆட்டத்தைக் கண்டுபிடித்துக் கொண்டார்.
3வது செட்டில் 3-2 என்று முன்னிலை வகித்தார். ஆனால் அப்போது கிடைத்த 2 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளையும் தவறவிட்டார். ஆனால் ஜோகோவிச் சில தவறுகளைச் செய்ய பிரேக் பாயிண்ட் வென்ற குல்பிஸ் 5-3 என்று முன்னிலை பெற்றார். பிறகு ஒரு ஏஸ் சர்வ் அடித்து 6-3 என்று அந்த ஒரே செட்டைக் கைப்பற்றினார்.
4வது செட்டில் துவக்கத்தில் இருவரும் அவரவர் சர்வ்களை பரஸ்பரம் இழந்தனர். ஆனால் ஜோகோவிச் மீண்டும் குல்பிஸ் சர்வை முறியடித்து 5-3 என்று முன்னிலை பெற்றார். வெற்றிக்கான சர்வில் ஜோகோவிச் ஒரு சர்வைக்கூட இழக்காமல் கோலோச்சி இறுதிக்குத் தகுதி பெற்றார்.