Last Updated : 09 Apr, 2021 03:12 AM

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கில் முதல் இரட்டைத் தங்கம்

முதலாவது ஒலிம்பிக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்காக 2 தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் எட்வின் பிளாக். இந்த 2 தங்கப்பதக்கங்களையும் அவர் வென்ற நாள் ஏப்ரல் 9, 1896. 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் இந்த தங்கப்பதக்கங்களை வென்றார்.

எட்வின் பிளாக் லண்டன் நகரில் பிறந்தவர். இருப்பினும் எட்வின் குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. மெல்பர்ன் நகரில் உள்ள பள்ளியில் படித்த எட்வின் பிளாக், படிக்கும் காலத்திலேயே தடகள போட்டிகளில் சிறந்தவராக விளங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ‘பிரைஸ் அண்ட் வாட்டர்ஹவுஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக 1895-ல் லண்டன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பிளாக்.

தனது விளையாட்டு ஆர்வம் காரணமாக, லண்டனில் உள்ள தடகள கிளப்பில் இணைந்த எட்வின் பிளாக், இங்கிலாந்தில் நடந்த பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தார். இந்த நேரத்தில்தான் ஏதென்ஸ் நகரில் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதைக் கேள்விப்பட்டார். ஆஸ்திரேலியாவின் சார்பில் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில், ஆஸ்திரேலியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீரரான எட்வின் பிளாக், 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம் 11 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 1,500 மீட்டர் ஓட்டத்திலும் வெற்றி அவரது வசமாகியது.

இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்த எட்வின், மாரத்தான் போட்டியிலும் பங்கேற்றார். ஆனால் நீண்டதூரம் ஓடிப் பழக்கம் இல்லாததால், அவரால் வெற்றி பெற முடியவில்லை.

தடகளப் போட்டிகள் மட்டுமின்றி, டென்னிஸ் போட்டியிலும் ஆஸ்திரேலியா சார்பாக அவர் போட்டியிட்டார். ஆனால் இதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பிற்காலத்தில் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக மாறிய எட்வின் பிளாக், தனது 62-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x