Published : 21 Jun 2014 06:01 PM
Last Updated : 21 Jun 2014 06:01 PM

மலேரியாக் காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே வெளியேறிய இங்கிலாந்து

பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டி வரும் என்று இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மலேரியாக் காய்ச்சல் தாக்காமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்டு வந்தனர்.

ஆனால் அவ்வளவு நாட்கள் பிரேசிலில் தங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. கோஸ்டா ரிகா, இத்தாலியை வீழ்த்திய போது இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது. மலேரியாக்காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே இங்கிலாந்து பிரேசிலில் இருந்து கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியின் ஆட்டத்தை கடுமையாக கேலி பேசியுள்ளன.

இங்கிலாந்து தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்களை அவரவர் தங்கள் மூளைக்கு உதித்த விதத்தில் கூறிவந்தாலும் ஏ.எஃப்.பி. செய்தி ஏஜென்சி இங்கிலாந்தின் பரிதாப வெளியேற்றத்திற்கு பிரதானமாக 5 காரணங்களை அலசியுள்ளது:

1. இங்கிலாந்து மேலாளர் ராய் ஹாட்க்சன் இளம் வீரர்களையும் கற்பனை சக்தி படைத்த வீரர்களையும் தேர்வு செய்ததாக பாராட்டப்படுகிறார். ஆனால் இத்தாலி மற்றும் உருகுவே ஆட்டங்களில் இங்கிலாந்து அணியில் ஒரு பேலன்ஸ் இல்லை. தாக்குதல் ஆட்டக்காரர்களான ரஹீம் ஸ்டெர்லிங், டேனி வெல்பெக், வெய்ன் ரூனி ஆகியோரை இடது புறத்தில் கொண்டு சென்று நிறுத்தி அணியின் தடுப்பு உத்தியில் ஓட்டை விழச்செய்தது முதல்படி தவறு. இந்தத் தவறு, அன்று இத்தாலி வீரர் பாலோடெல்லி கடைசியில் அடித்த வெற்றி கோல் நிரூபிக்கிறது. இத்தாலியின் ஆண்டனியோ காண்ட்ரீவா, லெய்டன் பெய்ன்சை சுலபமாகக் கடந்து சென்று பாலோடெல்லிக்கு பந்தை அளிக்க முடிந்தது. அதே போல் இத்தாலிக்கு எதிராக முக்கிய பங்காற்றிய ஸ்டெர்லிங் உருகுவே அணிக்கு எதிராக கிடுக்கிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை. மேலும் பதிலி வீரர் ராஸ் பர்க்ளி இரண்டு ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும் விதமாக எதையும் செய்து விடவில்லை.

2. மேலாளர் ஹாட்க்சனின் நன்கு நிறுவப்பட்ட உத்தியான 4-2-3-1 என்ற களவியூகம் பிரேசில் உலகக் கோப்பையில் போதவில்லை. இத்தாலிக்கு எதிராக ரூனி, ஸ்டெர்லிங், வெல்பெக், டேனியல் ஸ்டரிட்ஜ் ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், உருகுவே அணிக்கு எதிராக இவர்களது ஆட்டத்தில் ஒரு முறையாக வகுத்தெடுக்கப்பட்ட உத்தியை பின்பற்றாமல் இருந்தது. பந்து வந்தவுடன் ஏதோ அவசரகதியில் எடுத்துச் சென்று தடுக்கப்பட்டனரே தவிர ஆட்டத்தில் தீர்மானமான திட்டம் எதுவும் இல்லை.

3. இங்கிலாந்து வாங்கிய அனைத்துக் கோல்களும் அடிப்படையான பாதுகாப்பு தவறுகளே. கார்னர் ஷாட்டில் கவனமின்மையால் இத்தாலி வீரர் கிளாடியோ மர்சிசோ முதல் கோலை அடித்தார். பாலோடெல்லி அடித்த வின்னர் கோலின் போது இங்கிலாந்து வீரர் பெய்ன்ஸின் திறன் போதாமையாகவே இருந்தது. உருகுவே அணிக்கு எதிராக 6 வீரர்கள் அரணாக இருந்தும் உருகுவே வீரர் எடின்சன் கவானி, மிகச்சரியாக சுவாரேஸுக்கு பந்தை அளிக்க முடிந்தது. இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவது கோலையும் சுவாரேஸ் எந்த வித இடையூறுமின்றி அடித்தார். இந்தத் தற்காப்பு உத்தியை முன்னாள் இங்கிலாந்து வீரர் ரியோ ஃபெர்டினாண்ட் “பள்ளிச்சிறுவர்களின் ஆட்டத்திற்கு ஒப்பானது” என்று வர்ணித்தார்.

4. உருகுவே அணிக்கு எதிராகவும் இத்தாலி அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்ததில் முன்னிலை வகித்தது, ஆனால் திட்டமிடல் இல்லாததாலும் தேவையில்லாத அவசரம் காட்டியதாலும் கோல் போட முடியவில்லை. உருகுவே அணிக்கு எதிராக 1-1 என்று சமனிலையில் இருந்தபோது இங்கிலாந்து வெகு சுலபமாக ஆட்டத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தோல்வி அடைந்தது.

5.இங்கிலிஷ் பிரிமியர் லீகில் லிவர் பூல் அணிக்காக ஆடிய ஸ்டீவன் ஜெரார்ட் களைப்படைந்தார். அவரது ஆட்டத்தில் போதிய வேகமோ, சாதுரியமோ இல்லை. உருகுவே அணிக்கு எதிராக சுவாரேஸ் அடித்த 2 கோல்களுக்கும் மூல காரணம் ஜெரார்ட்தான். முதலில் தன் வசம் இருந்த பந்தை எளிதில் உருகுவே வீரருக்கு விட்டுக் கொடுத்தார். இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவதாக தலையால் முட்டிப் பந்தை சுவாரேஸிடமே அளித்தார் இதுவே 2வது கோலாகவும் மாறியது. அவர் எழுச்சியடையாமல் சோர்வாக, களைப்பாக ஆடியது இங்கிலாந்தின் பின்னடைவைத் தீர்மானித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x