

19-வது உலகக் கோப்பை 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுதான். போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இத்தாலி, 2006 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய பிரான்ஸ் ஆகிய அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.
போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றோடு வெளியேறியது உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாகும். நியூஸிலாந்து அணி முதல் சுற்றோடு வெளியேறினாலும், குரூப் சுற்றில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் டிரா செய்தது. இதன்மூலம் அந்த உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையைப் பெற்றது.
முதல் அரையிறுதியில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
8-வது நாடு ஸ்பெயின்
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஆட்டநேர முடிவில்ஸ்பெயினும், நெதர்லாந்தும் கோலடிக்கவில்லை. இதன்பிறகு கூடுதல் நேரத்தின் 116-வது நிமிடத்தில் ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா கோலடிக்க, ஸ்பெயின் உலக சாம்பியன் ஆனது. இதன்மூலம் உலக கோப்பையை வென்ற 8-வது நாடு என்ற பெருமை ஸ்பெயினுக்கு கிடைத்தது.
நெதர்லாந்து அணி 3-வது முறையாக இறுதிச்சுற்றில் தோல்வி கண்டது. இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி 8 கோல்கள் மட்டுமே அடித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் சாம்பியன் ஆன ஓர் அணி அடித்த குறைந்தபட்சம் கோல் இதுதான்.
அதேநேரத்தில் கேப்டன் இகர் காசில்லஸின் அற்புதமான கோல் கீப்பிங் காரணமாக ஸ்பெயின் அணி எதிரணிகளிடம் 2 கோல் மட்டுமே வாங்கியது. இதுவரை நடைபெற்ற 19 உலகக் கோப்பைகளில் 10 கோப்பைகள் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த அணிகள் வசமுள்ளன. 2010 உலகக் கோப்பையில் யாருக்கு வெற்றி என்பதை துல்லியமாகக் கணித்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆக்டோபஸ் பால் மிகவும் பிரபலமடைந்தது.
2010 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 64
மொத்த கோல் - 145
ஓன் கோல் - 2
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3,178,856
கோலின்றி முடிந்த ஆட்டம் - 7
டிராவில் முடிந்த ஆட்டம் - 16
டாப் ஸ்கோர்
தாமஸ் முல்லர் (ஜெர்மனி) - 5 கோல்
வெஸ்லே ஸ்நீஜ்டர் (நெதர்லாந்து) - 5 கோல்
டேவிட் வில்லா (ஸ்பெயின்) - 5 கோல்
டீகோ போர்லான் (உருகுவே) - 5 கோல்
ரெட் கார்டு - 17
யெல்லோ கார்டு - 261