Last Updated : 07 Apr, 2021 07:02 PM

 

Published : 07 Apr 2021 07:02 PM
Last Updated : 07 Apr 2021 07:02 PM

இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ்தான் சாம்பியன்; மற்றொரு அணிக்கும் வாய்ப்பு: மைக்கேல் வான் கணிப்பு

மும்பை இந்தியன்ஸ் | கோப்புப் படம்.

சென்னை

வரும் 9-ம் தேதி தொடங்கும் 14-வது ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லக்கூடும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கணித்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி 14-வது ஐபிஎல் டி20 தொடர் சென்னையில் தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியதால், இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல தோனி படை கடந்த மார்ச் மாதத்திலிருந்தே பயிற்சியைத் தொடங்கிவிட்டது.

அதே சமயம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மிரட்டலான ஃபார்மில் உள்ளது. இதனால் இரு முன்னாள் சாம்பியன்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கிறது.

இது தவிர டெல்லி அணிக்கு புதிய கேப்டன் ரிஷப் பந்த், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ், கடந்த ஆண்டு அனைவரின் ஆதரவையும் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் களத்தில் தயாராக இருக்கின்றன.

மைக்கேல் வான்

இந்நிலையில் இந்திய அணி குறித்து அடிக்கடி சர்ச்சையாகப் பேசிவரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், மும்பை அணிதான் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் எனக் கணித்துள்ளார்.

மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “2021 ஐபிஎல் டி20 தொடரை முன்கூட்டியே கணிக்கிறேன். இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லும். ஆனால், ஒருவேளை மும்பை அணிக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், துரதிர்ஷ்டமாக தவறவிட்டால், சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கைப்பற்றும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இந்திய அணி சில போட்டிகளில் மோசமாகச் செயல்பட்டதையும் மைக்கேல் வான் கிண்டலடித்தார். இந்திய டி20 அணியை விட, மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அணியாக இருக்கிறது. இந்திய அணி வெற்றி பெறவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிதான் வென்றது என்று சர்ச்சையாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும், மே.இ.தீவுகள் அணியைச் சேர்ந்த கெய்ரன் பொலார்ட் 7 நாட்கள் தனிமைக் காலத்தை முடித்து மும்பை அணியில் இன்று இணைந்தார். சென்னையில் அடுத்துவரும் நாட்களில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு சேர்ந்து பொலார்ட் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x