Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல் அணியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா ரிஷப் பந்த்?

புதுடெல்லி

2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2-வது இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த சீசனில் புதிய கேப்டனான ரிஷப் பந்த் பொறுப்பேற்றுள்ளதால் அவர்மீதான எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.

திடமான பேட்டிங், சக்தி வாய்ந்த வேகப்பந்து வீச்சு துறை ஆகியவற்றால் இந்த வருடமும் டெல்லி கேபிடல்ஸ் அணியை வலுவான போட்டியாளராக்கி உள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் விலகி உள்ளதால் போட்டி தொடங்குவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்புதான் ரிஷப் பந்த், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு சீசனில் 3வது இடம் பிடித்த டெல்லி அணியானது அதில் இருந்து முன்னேற்றம் கண்டு கடந்த சீசினல் இறுதிப் போட்டி வரை கால்பதித்திருந்தது. இந்த சீசனில் அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணியை வரும்10-ம் தேதி மும்பையில் எதிர்கொள்கிறது.

பலம்: வலிமையான பேட்டிங் மற்றும் வலுவான தாக்குதல் பந்து வீச்சை கொண்ட சீரான அணிகளில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. ஷிகர் தவண், பிரித்வி ஷா, அஜிங்க்ய ரஹானே என டாப் ஆர்டர் பேட்டிங் திடமாக உள்ளது. ரிஷப் பந்துடன் மார்கஸ் ஸ்டாயினிஸ், சிம்ரன் ஹெட்மையர், சேம் பில்லிங்ஸ் ஆகியோரில் யாரேனும் ஒருவர்நடுவரிசை பேட்டிங்கில் ஸ்ரேயஸ்ஐயரின் இடத்தை நிரப்பக்கூடும். புதிதாக அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கக்கூடும்.

கடந்த சீசனில் ஷிகர் தவண் 618 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2வது இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் 98 மற்றும் 67 ரன்கள் விளாசியிருந்தார். அதேவேளையில் பிரித்வி ஷா, விஜய் ஹசாரே தொடரில் 827 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். இதனால் இந்த ஜோடியிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

ரிஷப் பந்த் சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடர்களில் வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார். அவருடன் ஆல்ரவுண்டர் ஸ்டாயினிஸ், சேம் பில்லிங்ஸ் ஆகியோர் போட்டியை சிறப்பாக முடித்து வைக்கும் பணியை மேற்கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். வேகப்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜேகூட்டணி கடந்த சீசனில் 52 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பலவீனம்: வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களில் தரம் வாய்ந்த மாற்று வீரர்கள் இல்லை. இதனால் காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே போன்ற முன்னணி வீரர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகக்கூடும்.

மேலும் திடீரென ரிஷப் பந்த் காயம் அடையும் நிலை ஏற்பட்டால் அவருக்கு சமமான அளவிலான மாற்று விக்கேட் கீப்பர் அணியில் இல்லை. கேரளாவைச் சேர்ந்த விஷ்னு வினோத் அணியில் இம்முறை சேர்க்கப்பட்டிருந்தாலும் அவருக்கு போதிய அனுபவம் இல்லை.

இந்தியாவின் முதன்மை பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தேசிய அணியில் தற்போது இடம்பெறுவது இல்லை. இதனால் குறுகிய வடிவிலான போட்டிகளில் இவர்களது பந்துவீச்சு எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

வாய்ப்பு: பெரிய சவாலாக இருந்தாலும், இளம் கேப்டன் ரிஷப் பந்த் தனது அணி முதல் முறையாக பட்டம் வெல்லும் வகையில் வழிநடத்துவதன் மூலம் புகழ்பெற்ற எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிட்டுப்பார்க்கப்படுவதில் இருந்து விலகுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இந்தத் தொடர் இருக்கும். அவர் ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வாய்ப்பையும் இந்த தொடர் வழங்குகிறது. உலகக் கோப்பையில் அவர் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய வீரராக திகழக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x