Last Updated : 07 Apr, 2021 03:15 AM

 

Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஜெயசூர்யாவின் அதிரடி அரைசதம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா படைத்த நாள் ஏப்ரல் 7.

1996-ம் ஆண்டு நடந்த சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து ஜெயசூர்யா இந்த சாதனையைப் படைத்தார். இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெயசூர்யாவின் புகழ் உச்சத்தை தொட்ட ஆண்டு என 1996-ஐ கூறலாம். இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர், தனது அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை சந்தித்தது இலங்கை.

டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 215 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி களம் இறங்க, முதல் ஓவரிலேயே வகார் யூனுஸின் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி, தான் சூப்பர் பார்மில் இருப்பதை பாகிஸ்தானுக்கு கோடிட்டு காட்டினார் சனத் ஜெயசூர்யா. இதைத்தொடர்ந்து அடார் உர் ரஹ்மான் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 22 ரன்களைக் குவித்த ஜெயசூர்யா, 17-வது பந்திலேயே அரைசதம் அடித்து, மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் ஜெயசூர்யா 76 ரன்களைக் குவித்தபோதிலும், பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சுக்கு இலங்கை அணியால் பதில் சொல்ல முடியவில்லை. 172 ரன்களில் இலங்கை அணி ஆல் அவுட் ஆக சிங்கர் கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x