Last Updated : 06 Apr, 2021 08:43 PM

 

Published : 06 Apr 2021 08:43 PM
Last Updated : 06 Apr 2021 08:43 PM

‘டாடிஸ் ஆர்மி’ சிஎஸ்கே இப்போது ‘ரிட்டயர்டு ஆர்மி’யா? இழந்த பெருமையை மீட்குமா தோனி படை?

கோப்புப் படம்.

“அடுத்த ஆண்டு வலிமையோடு திரும்பி வருவோம்”. இந்த வார்த்தைகள் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி உதிர்த்தவைதான்.

3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7-வது இடத்துடன் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் சிஎஸ்கே வெளியேறியது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

ஆனால், பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் டாடிஸ் ஆர்மி எனும் பெயரை மாற்றவும், இளம் ரத்தம் பாய்ச்சும் முயற்சியிலும் புதிய வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி, ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், சத்தேஸ்வர் புஜாரா, ஹரிசங்கர் ரெட்டி, பகவர் வர்மா, ஹரி நிசாந்த் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆனால், சிஎஸ்கே அணி வீரர்கள் மீது பெரிய அளவுக்கு எதிர்பார்ப்போ அல்லது மனநிறைவோ ரசிகர்கள் பலருக்கும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிஎஸ்கே அணியின் கருவாக இருக்கும் (கோர் ப்ளேயர்ஸ்) வீரர்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், வீரர்களை மாற்றிவிட்டோம் என்று கூறியுள்ளார்கள். களத்தில்தான் இவர்களின் செயல்பாடு தெரியவரும்.

சிஎஸ்கே பலம்:

டாடிஸ் ஆர்மி என்று கிண்டலாக எவ்வாறு சொல்கிறார்களோ அதே அளவுக்கு அனுபவம் நிறைந்த வீரர்கள் இருப்பது சிஎஸ்கே அணியின் பலம். கடினமான சூழலில் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு நகர்த்தக்கூடிய வீரர்கள் இருப்பது பலமாகும். அனைத்தையும் விட தோனியின் தலைமை என்பது அணிக்கு முதுகெலும்பாக இருக்கிறது.

இந்த ஆண்டு ரெய்னா அணிக்குள் திரும்பி இருப்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சையும் பலப்படுத்தும். உத்தப்பாவைக் கொண்டு வந்து ஷேன் வாட்ஸன் இடத்தை நிரப்ப முயன்றுள்ளார்கள். வாட்ஷன் அளவுக்கு உத்தப்பா "பவர் ஹிட்டரா" என்பதைக் கூற இயலாது.
இது தவிர பேட்டிங்கில் டூப்பிளசிஸ், தோனி, அம்பதி ராயுடு, ஜடேஜா, சாம் கரன், மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் போன்றோர் இருப்பது பேட்டிங்கில் வலிமை சேர்க்கிறது.

அதிகமான ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கும் அணியாக சிஎஸ்கே இருக்கிறது. மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், ரவிந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர், சாம் கரன், டுவைன் பிராவோ, மிட்ஷெல் சான்ட்னர் என ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது பலம். இதனால் முழுநேரப் பந்துவீச்சாளர்கள் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு ஆல்ரவுண்டர்களை அதிகப்படுத்த முடியும். பேட்டிங் வரிசை 9-வது வீரர் வரை இருக்கும் வகையில் அமைக்க முடியும்.

பந்துவீச்சில் லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், சாம் கரன், பிராவோ ஆகிய 5 பேரைத் தவிர வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை. ஹேசல்வுட் திடீரென விலகியது சிஎஸ்கேவுக்குப் பின்னடைவுதான். இதில் லுங்கி இங்கிடி கடந்த தொடரில் மோசமாகப் பந்துவீசினார். சமீபத்தில் அவர் பெரிதாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவரின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது. பிராவோ காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.

மொத்தத்தில் நாங்கள் மாற்றம் செய்துவிட்டோம் என்று சிஎஸ்கே அணி சொன்னாலும் அது வெளிவார்த்தைதான். உள்ளுக்களுள் முக்கிய வீரர்கள் யாரும் மாற்றப்படவில்லை.

பலவீனம்

சிஎஸ்கே அணி என்றாலே பலவீனம் என்பது முதலில் வருவது வீரர்களின் வயதுதான். வயது அதிகமானாலே காயமும் இயல்பாகச் சேர்ந்துவிடும். சிஎஸ்கே அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் யாரும் சர்வதேசப் போட்டிகளில் சமீபத்தில் விளையாடவில்லை. முக்கிய வீரர்கள் ஓய்வுபெற்ற வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

முறையான பயிற்சி, சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாமல் கடந்த தொடரில் தோனி திணறியதைக் காண முடிந்தது. இதில் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடி பெரிதாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ராயுடு, உத்தப்பா இருவருக்கும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஜடேஜா காயத்தால் கடந்த 3 மாதங்களாக விளையாடவில்லை.

டூப்பிளசிஸ் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்ததால், டெஸ்ட், ஒருநாள் பிரிவில் ஓய்வை அறிவித்துவிட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாட உள்ளார். பிராவோ நீண்ட நாட்களுக்குப் பின் சமீபத்தில் மே.இ.தீவுகள் அணியில் விளையாடினாலும் அடிக்கடி காயத்தால் அவதிப்படுவது பெரிய பலவீனமாகும்.

அதிரடியான தொடக்கத்தை அளிக்க வாட்ஸன் போல் பவர் ஹிட்டர்ஸ் யாருமில்லை. உத்தப்பா மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அவரின் ஸ்ட்ரைக் ரேட் அதற்கு சாதகம் என்று கருதப்பட்டாலும், கடந்த கால்களில் அவரின் செயல்பாடு திருப்தியில்லை. டூப்பிளசிஸுக்குத் துணையாகப் பெரும்பாலும் உத்தப்பாவை களமிறக்கவே வாய்ப்புள்ளது.

இது தவிர அம்பதி ராயுடுவுக்கு சர்வதேச அனுபவம் நீண்ட நாட்களாக இல்லை. சத்தேஸ்வர் புஜாரா டி20 போட்டியில் ஜொலிப்பாரா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கெய்க்ட்வாட், ஜெகதீஸன் போன்ற இளம் வீரர்கள் கடந்த தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த முறை அவர்கள் செயல்பாடு தெரியவரும்.

பந்துவீச்சில் ஹேசல்வுட் விலகியது சிஎஸ்கே அணிக்குப் பெரும் பின்னடைவு. வேகப்பந்துவீச்சுக்குச் சரியான தேர்வு என யாருமில்லை. லுங்கி இங்கிடியை நம்பி அனைத்து ஆட்டங்களுக்கும் வாய்ப்பு தருவது கத்தி மீது நடப்பது போலத்தான்.

அணியில் உள்ள ஆல்ரவுண்டர்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக இருக்கிறார்கள். இந்த முறை ஆட்டங்கள் மும்பையில் நடப்பதால், ஆடுகளம் ஓரளவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இந்தச் சூழலில் சழற்பந்துவீச்சை மட்டும் சிஎஸ்கே நம்பி இருக்கவும் முடியாது.

விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் இருக்க முடியும் என்பதால் வீரர்களைத் தேர்வு செய்வதிலும் பெரும் சிக்கல் உருவாகும். பெரும்பாலான வீரர்கள் ஒரே மாதிரியான அளவுகோலில்தான் இருக்கிறார்கள். ஜடேஜா,ரெய்னா, மொயின் அலி, கவுதம் போன்றோர் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என ஒரே அளவுகோலில் வைக்கலாம்.

டூப்பிளசிஸ், சாம் கரன் கண்டிப்பாக அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டியது இருக்கும். மொயின் அலி, லுங்கி இங்கிடி, பிராவோ, இம்ரான் தாஹிர் இந்த 4 பேரில் யாரைத் தேர்வு செய்வது எனக் குழப்பம் இருக்கிறது. மொயின் அலியை ஆல்ரவுண்டர் அந்தஸ்தில் எடுத்துவிட்டாலும் அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்க முடியுமா என்பது கடினம்தான். அதேசமயம், ரூ.7 கோடிக்கு விலைக்கு வாங்கி ஏதும் செய்யாமல் அமரவைக்கவும் முடியாது. இதனால் வீரர்கள் தேர்வில் பெரும் குழப்பம் ஏற்படும்.

ஒட்டுமொத்தத்தில் சாம்பியன் அணி என்ற இழந்த பெருமையை மீட்குமா, மீண்டும் சாம்பியானாகும் வேகத்தோடு தோனி படை களமிறங்குமா என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அணி விவரம்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரெய்னா, அம்பதி ராயுடு, ஆஷிப், தீபக் சஹர், டுவைன் பிராவோ, டூப்பிளசிஸ், இம்ரான் தாஹிர், என்.ஜெகதீசன், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, மிட்ஷெல் சான்ட்னர், ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், சாம் கரன், சாய் கிஷோர், மொயின் அலி, கவுதம், சத்தேஸ்வர் புஜாரா, ஹரிசங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிசாந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x