Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 2 நாட்கள்- பெங்களூரு அணி பட்டம் வெல்லுமா?

வழக்கம் போல் இம்முறையும் ஐபிஎல் டி 20 தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் கனவுடன் களமிறங்குகிறது விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே பேட்டிங்கில் சார்ந்திருந்தது கடந்த சீசனில் பெங்களூரு அணியின் வெற்றியை பாதித்தது. இதனால் 13 வருடங்களாக பட்டம் வெல்லும் அந்த அணியின் கனவு ஏக்கமாகவே தொடர்கிறது. பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 9ம் தேதி மும்பையுடன் மோதுகிறது.

பலம்: விராட் கோலி இம்முறை தொடக்க வீரராக களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். அவருடன் மற்றொரு தொடக்க வீரராக கடந்த சீசனில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் களமிறங்கக்கூடும். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சமீபத்தில் நிறைவடைந்த விஜய் ஹசாரே தொடரில்7 ஆட்டங்களில் 737 ரன்கள் குவித்துஅசத்தியிருந்தார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மொகமது அசாருதீன், நியூஸிலாந்தின் பின் ஆலன் ஆகியோரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே. நடுவரிசையில் டி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி,டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். பெங்களூரு அணி சுழலில் வலுவாக உள்ளது. யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தருடன் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பெங்களூரு அணி சுழல் சார்ந்த ஆடுகளங்களில் அதிகம் விளையாட உள்ளதால்வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

பலவீனம்: பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சு துறை உத்வேகத்துடன் இல்லை. நவ்தீவ்சைனி, மொகமது சிராஜ் ஆகியோர் கடந்த சீசனில் அதிக ரன்களை வழங்கினர். புதிதாக வந்துள்ள நியூஸிலாந்தின் கைல் ஜெமிசன் டி 20-ல் சிறப்பாக செயல்பட்டது இல்லை. இவர்களுக்கு மாற்றாக ஹர்சால் படேல் ஆஸ்திரேலியாவின் டேன் கிறிஸ்டியன், டேனியல் சேம்ஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் அணியில் உள்ளனர்.இதற்கிடையே தேவ்தத் படிக்கல்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x